Last Updated : 15 Apr, 2019 05:49 PM

 

Published : 15 Apr 2019 05:49 PM
Last Updated : 15 Apr 2019 05:49 PM

என்னை வேட்பாளராக்கினால் அது குடும்ப அரசியலா?- சீமான் மச்சான் பேட்டி

தேர்தல் களத்தில் பேச்சாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது எனக் கூறுகிறார் விருதுநகர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் வேட்பாளரும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகனுமான அருள்மொழித் தேவன்.

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக சார்பில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அமமுக சார்பில் பரமசிவ ஐயப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழித்தேவன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓயும் வேளையில் நாம் தமிழர் வேட்பாளர் அருள்மொழித் தேவனை 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக தொடர்பு கொண்டோம்.

நாளை பிரச்சாரம் ஓய்கிறது. இதுவரையான பிரச்சாரத்தில் பார்த்தவரை மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

நாங்கள் களத்தில் கடைசி நேரம் வரை தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறோம். நான் பார்த்தவரை மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளும் சரி, தேசியக் கட்சிகளும் சரி அவர்களைச் சலிப்படைய வைத்திருக்கிறது. அவர்கள் அரசியல் தேடலில் இருக்கின்றனர்.

அப்படியென்றால் இது உங்களுக்கான களம்தானே?

ஆமாம். இது நிச்சயமாக எங்களுக்கான களமே. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே நாங்கள் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளைவிட அதிக வாக்கு சதவீதம் பெற்றிருந்தோம். இப்போதும் முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆதரவு இருக்கிறது.

அப்படி மாற்றம் விரும்பும் வாக்காளர்கள் அமமுக, மநீமவைவிட நாம் தமிழரை ஏன் விரும்புவார்கள் என நினைக்கிறீர்கள்?

ஏனென்பதை நாங்கள் அரசியலில், தேர்தல் களத்தில் இருக்கும் காலத்தையும் இவர்களுடைய காலத்தையும் ஒப்பிட்டால் தெரியும். இவர்கள் புதியவர்கள்.

மேலும், அமமுக தனிக் கட்சியா? எங்களைப் பொறுத்தவரை அது ஒரு ஸ்ப்ளிட் பார்ட்டி. அதிமுக எதிர்ப்பு என்பதைத் தவிர அதற்கென்று தனியான கொள்கை ஏதும் இருக்கிறதா?

மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் எங்கள் கட்சியின் கொள்கைகளை ஒரு ஜெராக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் மாறுதல்களைச் செய்துவிட்டு எங்கள் கட்சிக் கொள்கைகள் என்கிறார்.

எங்கள் கொள்கைகளை அறிந்த தெரிந்த இளைஞர்கள் அமமுக, மநீமவைவிட எங்களையே ஆதரிப்பார்கள்.

எல்லா மேடைகளிலும் குடும்ப அரசியலை விமர்சித்துவிட்டு மாப்பிள்ளை... அன்பு மாப்பிள்ளை என்று கூறி உங்களை வேட்பாளராக்கிவிட்டாரே?

நான் குடும்பத்தில் இருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு வரவில்லை. வேட்பாளராகவில்லை. 2009-ல் இருந்து கட்சியில் இருக்கிறேன். அப்போது என் சகோதரிக்கும் சீமானுக்கும் திருமணம் கூட ஆகவில்லை. அப்புறம் எப்படி நான் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் கட்டமைப்புக்குள் வருவேன். எங்கள் கட்சியே ஒரு குடும்பம் மாதிரிதான் சீமான் என்னை மச்சான் என்பார். கட்சிக்காரர்கள் எல்லோருமே அவரை அண்ணன் என்றும் என்னை மச்சான் என்றுமே அழைப்பார்கள். களத்தில் உள்ள 40 வேட்பாளர்களுமே அக்கா, தம்பி, அண்ணன் என்று உறவு சொல்லியே அழைக்கிறோம். அந்த வகையில் வேண்டுமானால் எங்கள் கட்சியில் குடும்பம் இருக்கலாம்.

நீங்கள் மிகப்பெரிய பேச்சாளரின் மகன். மேடைகளில் உங்கள் பேச்சாற்றல் எப்படி?

என் தந்தைக்கு நிகராக யாரும் வர இயலாது. நானும் நெருங்க இயலாது. இந்தத் தேர்தலில் என்னை அடையாளப்படுத்துவது, என் கட்சியை அடையாளப்படுத்துவது, எங்கள் கொள்கையைக் கொண்டு சேர்ப்பதும், என் தொகுதிப் பிரச்சினையைப் பற்றி பேசுவதுமே எனது தலையாய கடமையாக இருக்கிறது. எனக்கு இலக்கிய அனுபவம் என் தந்தை அளவுக்கு இல்லை. ஆனாலும் மேற்கோள்கள் காட்டிப் பேசுகிறேன். இன்னும் நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலுக்குள் ஒரு பேச்சாளராக என்னைக் கட்டமைத்துக் கொள்வேன்.

2019 தேர்தலில் உங்களைக் கவர்ந்த பேச்சாளர்?

இந்த தேர்தல் களத்தில் பேச்சாளர்களுக்குப் பற்றாக்குறை இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும், எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பேச்சும் மொழிநடையும் நிவாரணமாக இருக்கிறது. வைகோ நன்றாகப் பேசுவார். ஆனால் அவர் மொழி நடை வேறு. தலைவர் போல் முழங்குவார். ஸ்டாலின் பேச்சு பல நேரங்களில் மற்றவர்கள் கிண்டல் செய்யும் அளவில் இருக்கிறது. எனக்கே பரிதாபமாக இருக்கிறது.

ஆனால், எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பேச்சு உணர்வுப்பூர்வமாக, எளிய நடையில், சாமானியர்கள் மொழியில் இருக்கிறது. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமிம் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகின்றனர். எங்கள் ஒருங்கினைப்பாளர் யதார்த்தமாகப் பேசுகிறார்.  தொகுதியின் பிரச்சினைகளைப் பேசுகிறார். தேசத்தின் பிரச்சினையை அரசியலைப் பேசுகிறார்.

மாற்றத்துக்காகப் பேசுகிறார். அவர்தான் என்னைக் கவர்ந்த பேச்சாளர். அந்தப் பேச்சால்தான் எங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு இளைஞர்கள் குவிகிறார்கள். அவர்கள் எல்லாம் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள். முழு நேர அரசியல்வாதிகள் இல்லை. சீமானின் பேச்சால் ஈர்க்கப்பட்டு சொந்தச் செலவில் கூட்டங்களுக்கு வருபவர்கள்.

அந்தக் கூட்டம் எல்லாம் ஏன் வாக்குகளாக மாறுவதில்லை?

நிச்சயமாக மாறும். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தத் தேர்தல் களத்திலேயே எங்கள் வாக்கு வங்கி அதனைச் சொல்லும். வடசென்னை வேட்பாளர் எங்கள் அக்கா காளியம்மாள், தூத்துக்குடி வேட்பாளர் ராஜசேகர் ஆகியோர் எங்கள் நட்சத்திர வேட்பாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அதுமட்டுமல்ல எங்கெல்லாம் தேசியக் கட்சி வேட்பாளர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்கு சதவீதம் கணிசமாக உயரும்.

இந்தத் தேர்தலில் பணநாயகத்தின் பங்கு என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். நாங்கள் தமிழர் உரிமை, தமிழர் பண்பாடு எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கே மக்கள் இன்னும் ஓட்டுக்குப் பணம் வாங்கி தமிழர் மாண்பைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசியல் கட்சிகளும் மக்களின் வறுமையையும் அறியாமையையும் பயன்படுத்தி பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். விருதுநகரில் அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளருக்காக ரூ.2000 கொடுக்கப்படுகிறது. காங்கிரஸ், அமமுக தலா ரூ.700 கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கண்ணில் பார்த்தும் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தால் கையறு நிலையில் இருக்கிறோம். பணத்துக்கு வாக்கு விற்பனை இந்தத் தேர்தலோடாவது ஓய வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மீளவே முடியாது. மாற்றமும் வராது. அரசியலில் மாற்றம் வர மக்கள் வாக்குக்கு காசு வாங்குவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தத் தேர்தலில் பணம் கொடுத்தாலும்கூட நகர்ப்புற வாக்காளர்களை வாங்க இயலாது. கிராமத்தில் உள்ள சில முதியவர்கள், பாமர மக்களின் வாக்குகளைத் தான் காசுக்கு வாங்க முடியும்.

இவ்வாறு அருள்மொழித் தேவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x