Last Updated : 29 Apr, 2019 05:26 PM

 

Published : 29 Apr 2019 05:26 PM
Last Updated : 29 Apr 2019 05:26 PM

இந்தக் கோடையில் குழந்தைகள் உலகத்துக்குச் சென்று வரலாமா!- வழிகாட்டுகிறார் எழுத்தாளர் விழியன்

குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியானது, ஆச்சரியமானது, கேள்விகளால் நிரம்பியது, வன்மமற்றது. ஆனால் அவர்கள் உலகத்துக்குள் நம்மால் அவ்வளவு எளிதாகச் சென்றுவிட முடியாது. அந்த உலகத்துக்கான சாவியை அவர்களே நம்மிடம் விரும்பிக் கொடுத்தால் மட்டுமே அதற்குள் நம்மால் செல்ல முடியும்.

தினமும் பள்ளிக்கூடம், மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள், இல்லாவிட்டால் ஏதாவது ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாட்டுப் பயிற்சி என பிள்ளைகள் பரபரப்பாகவே இருந்துவிடுவதால் ஜூன் தொடங்கி ஏப்ரல் பாதி வரை பெற்றோர்க்கு பிள்ளைகளின் இருப்பு கவனம் கொள்ளும் அத்தியாவசமாக இருப்பதில்லை.

ஆனால், ஒரே ஒரு மாதம் கோடை விடுமுறை விட்டுவிட்டால்போதும் வேலைக்குப் போகும் ஒட்டுமொத்த பெற்றோர் சமூகமும் திக்குமுக்காடிப் போகிறது.

பிள்ளைகளை 8 மணி நேரம் எங்கு பாதுகாப்பாக விடுவது என்ற தேடலில் தனது வயதான தாய், தந்தையரை ஆயாக்கள் ஆக்கிவிடுகின்றனர் சிலர். இன்னும் சிலர் எந்த சொந்த பந்தமும் வேண்டாம் என்று ஏதாவது சம்மர் கேம்பில் தள்ளிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

பெற்றோராக பெரிய கடமையை முடித்துவிட்டதாக நினைத்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கு சமம். கோடையை குழந்தைகளுடன் செலவழியுங்கள். அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இளைப்பாறுதல் தரும். இதைவிட கோடையைக் கொண்டாட வேறு சிறந்த வழியே இருக்க இயலாது.

அதற்காக இந்தக் கொண்டாட்டத்தை கோடைக்கு மட்டும் என்று சுருக்கிக் கொள்ளாதீர்கள். குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடமே குடும்பம்தான் என்ற சூழல் மாறி பொருள் ஈட்ட தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் நெருக்கடியில் பள்ளிகள்தான் குழந்தைகளின் முதல் குடும்பம் என்ற கருத்தியல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதையும், சொந்த பந்தங்களுடன் நேரம் செலவிடுவதற்கு கோடையிலாவது நேரம் ஒதுக்குவோம் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

உண்மையில் குழந்தைகளுடன் விளையாடி, கதை சொல்லி, குடும்பங்களுக்குள் சந்திப்பை ஏற்படுத்தி வாழ்வதே இயல்பு. அந்த இயல்பிலிருந்து நாம் விலகிவிட்டதால் அதை பழக்கப்படுத்த வேண்டிய நிலை வந்திருக்கிறது.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்..

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்துச்சாம்.. ஒரு ஊர்ல ஒரு விறகுவெட்டி இருந்தாராம்.. இப்படியெல்லாம் நம்மில் பலரும் நம் குழந்தைப் பருவத்தில் பாட்டி, தாத்தாவிடம், அப்பா, அம்மா இன்னும் வீட்டுப் பெரியவர்கள் பலரிடமும் கதை கேட்டிருப்போம்.

கதை சொல்லும் பெரியவர்கள்தான் குழந்தைகளின் அபிமானம் பெற்ற குடும்ப நபராக இருந்திருப்பார்கள். குழந்தைகளுடன் நெருங்க எளிய வழி கதை சொல்வது. கதைகள் நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை குழந்தைகளுக்கு எளிதாகக் கடத்தும். கதைகள் கற்பனையை வளர்க்கும். கதைகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கும். ஆனால் இன்று கதை சொல்வதும் கேட்பதும் அருகி வருகிறது.

 

 

குழந்தைகளின் மகிழ்ச்சியை உறுதி செய்ய பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது கதை சொல்லும் பழக்கத்தையும் மீட்டெடுப்பது.

அதற்கான ஆலோசனையை வழங்குகிறார் சிறார் இலக்கிய படைப்பாளி எழுத்தாளர் விழியன்.

காலப் பயணிகள், பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை, பென்சில்ஸ் டே அவுட், டாலும் ழீயும், மாகடிகாரம், வளையல்கள் அடித்த லூட்டி, உச்சி முகர், அக்னிச் சுடர்கள், திரு. குரு ஏர்லைன்ஸ் போன்ற புத்தகங்களை வடித்தவர்.

குழந்தைகள் உலகத்திற்குள் செல்வதற்கான ஒரு ருசிகரமான வழியை அவர் வழியில் அறிந்து கொள்வோம்.

அவருடனான நேர்காணலில் இருந்து:

என் பாட்டி எனக்கு கதை சொன்னார்; என் அம்மாவோ இப்போது பேரப்பிள்ளைகளிடம் வீடியோ கேம் கற்றுக் கொண்டிருக்கிறார்.. இந்த மாற்றத்தை ஒரு எழுத்தாளராக, கதை சொல்லியாக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது சமூக மாற்றத்தின் ஒரு பங்கு. இதே போல நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். பாட்டிகளையும் தாத்தாக்களையும் இனியும் எதிர்பார்க்க முடியாது. அது நியாயமும் இல்லை. அவர்கள் விருப்பப்படும் வாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும். அவர்களின் இந்த ஆர்வமும் இயல்பானதே.

அப்படி எனில் யார் இந்த கதைகளைச் சொல்ல வேண்டும்?

பெற்றோர்கள் தான். தாய் தந்தையர்கள் தான் இந்த இடத்தினை நிரப்ப வேண்டும். 

குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?

கதைகள் கற்பனைத்திறனை வளர்க்கும். நீங்கள் சொல்லும் கதையில் வரும் எல்லா காட்சிகளையும் இடங்களையும் அவர்களே கற்பனையில் உருவாக்க வேண்டும். அது அவர்களின் கற்பனையை விரிவுபடுத்துகின்றது. திரையில் காண்பது ஏதோ ஒரு கலைஞனின் கற்பனை. ஆனால், கதைகளில் காண்பது குழந்தைகளுடைய கற்பனை. பத்து குழந்தைகளுக்கு ஒரே கதையை சொல்லுங்கள் ஒவ்வொரு குழந்தையும் காட்சிகளை ஒவ்வொருவிதமாக கற்பனை செய்யும். கதைகள் குழந்தைகளின் வாழ்வை வண்ணமயமாக்கும்.

பெற்றோர்கள் பெரும்பாலானோர் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதையே குழந்தை வளர்ப்பு என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவே அவர்களுடன் நம்மை நெருக்கமாக்கும் என நினைக்கின்றனர். அது சரியானதுதானா? இல்லை என்றால் குழந்தைகளின் உலகத்துக்குள் எப்படி நம்மை நாம் நெருக்கமாக்கிக் கொள்வது?

குழந்தைகள் கேட்டதை வாங்கிக்கொடுப்பதால் அவர்களுடைய உலகத்தில் நாம் நெருக்கமாகிவிட முடியாது அது ஒரு மாயை மட்டுமே. உண்மையில் அவர்களின் உலகிற்கு நம்மை அவர்கள் அனுமதிக்க வேண்டும். அந்த சம்மதம் எளிதல்ல.

அதற்கு அவர்கள் கேட்டதை வாங்கிக்கொடுப்பதைவிட அவர்களிடம் நாம் கேட்க வேண்டும். அதாவது அவர்களுடன் அவர்கள் அளவிற்கு இறங்க வேண்டும். அவர்களின் வலிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும், அவர்களின் மகிழ்வில் நாம் பங்குகொள்ள வேண்டும்.

பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த பேச்சும் அவர்கள் வளர வளர குறைய வேண்டும். சிறு வயதில் ஏற்படுத்தும் இந்த உரையாடல்கள் அவர்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தும். அது வாழ்நாளுக்கும் தொடரும். இவரிடம் என்ன சொன்னாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். இதுவே குழந்தை வளர்ப்பின் சாரம். மேலும் கேட்டதை எல்லாம் வாங்கித்தர வேண்டுமா? நம் கைகளின் நீளம் என்ன? எது சாத்தியம்? எது தேவை எது தேவையில்லை ஆகியவற்றை உரையாடல் மூலம் குழந்தைகளுக்கு உணர்த்துவதும் அவசியம்.

ஒரு கதை சொல்லியாக உங்களின் சுவாரஸ்ய அனுபவம்.. ஒன்றிரண்டை பகிருங்களேன்..

முதலில் நான் கதை எழுதுபவன். அதுவே என்னை கதை சொல்லியாகவும் அடையாளப்படுத்தியது. தினமும் வாட்ஸப்பில் அனுப்பும் கதைகளின் வழியே நெருக்கமான பல உறவுகள் கிடைத்துள்ளார்கள். நான் கூறினால் சரியாக இருக்கும் என குழந்தைகள் நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கையை கதைகள் உருவாக்குகின்றன.

ஒருமுறை என் கதைகளை வாசிக்கும் குழந்தை புதிய வகுப்பிற்கு செல்கின்றாள். அவளுக்கு என்னைப்போல கதை சொல்லியாக மாற வேண்டும் என்று ஆசை. புதிய வகுப்பில் அவளுக்கு யாரும் தோழிகளே இல்லை. பள்ளிக்கு போகவே மாட்டேன் என அடம்பிடிக்கின்றாள். அவளுடைய தாய் என்ன செய்வது என்று கேட்டபின்னர் ஒரு தகவலை அனுப்பினேன். "கதை சொல்லிகளுக்கு பல அனுபவங்கள் தேவை. அவர்களுக்கு எல்லோருமே நண்பர்கள் தான். நீ கதை சொல்லியாக மாறவேண்டுமா"- விழியன் மாமா அனுப்பி இருக்கின்றார் என்பதுதான் அந்தத் தகவல். மறுநாள் முதல் மகிழ்வாக பள்ளிக்கு கிளம்பினாள். புதிய அனுபவங்களைப் பெற திறந்த மனதுடன் சென்றாள். கதைகள் ஊட்டும் நம்பிக்கை அந்த தருணத்தில் எனக்கு பிரமிப்பைத் தந்தது.

என் மனைவி ஒரு கதை சொல்லி. ஒருமுறை நாங்கள் ஓர் அரசுப்பள்ளியில் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தோம். காலை முதல் மாலை வரை அது நீடித்தது. அன்று மாலை பாலியல் சார்ந்த ஒரு சின்ன உரையாடலை மாணவிகளுடன் என் மனைவி நடத்தினார். நிகழ்வு முடிந்ததும் ஒரு மாணவி என் மனைவியிடம் வந்து தன்னை ஓருவன் பாலியல் ரீதியாக சீண்டுவதாகச் சொன்னாள்.

உடனே ஆசிரியரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தோம். ஆசிரியருக்கு ஆச்சரியம். ஏன் இதுவரையில் இவள் என்னிடம் சொல்லவில்லை என்றார். கதைகள் கொடுக்கும் நம்பிக்கை தான் என்று கூறினோம். குழந்தைகளிடம் நாம் நிறைய பேசும்போது, அவர்களுக்கு கதை சொல்லி, அவர்களை சொல்லும் கதைகளைக் கேட்கும்போது நம்பிக்கை ஏற்படும் என்றோம்.

குழந்தைகளிடம் எப்படி வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்?

வாசிப்பு பழக்கம் அவசியம் என பெற்றோர்களும் ஆசிரியர்கள் முதலில் உணர்தல் வேண்டும். கிரமப்புற மாணவர்களுக்கு நிச்சயம் ஆசிரியர்களே இந்த விஷயத்தில் வழிகாட்டியாக இருக்க முடியும். இதில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. வகுப்பில் தொடர்ச்சியாக புது புது புத்தங்களை அறிமுகம் செய்தால் புத்தகம் மீதான ஈர்ப்பு ஏற்படும். அதே போல பள்ளிகளில் நூலகங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். நூலக வகுப்புகளை மற்றவர்கள் பங்குபோட்டுக்கொள்ளக்கூடாது. சில இடங்களில் நூலகமும் இல்லை வகுப்பும் இல்லை என்பது துயரம்.

வீடுகளில் பெற்றோர்கள் முதலில் அவர்கள் வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும். முடிந்த நேரமெல்லாம் குழந்தைகளுடன் அமர்ந்து கூட்டாக வாசிக்கலாம். முதலில் அவர்கள் முன்னர் அமர்ந்து வாசிக்க வேண்டும். வாசிப்பினை ஆரம்பிக்கும்போது நாம் வாசித்துக் காட்டவேண்டும், பின்னர் தலைப்புகளை மட்டும் வாசிக்க சொல்லலாம். கொஞ்சமாக வரிகளையும் அப்படியே தனியாக வாசிக்கவும் பழக்கப்படுத்தலாம். அதே போல வயது மாற மாற புத்தகத்தேர்வும் மாற வேண்டும். வளர வேண்டும்.

புத்தகத் திருவிழாவுக்கு குடும்பமாக செல்வதை ஒருசிலர் ஸ்டேட்டஸ் சிம்பள் என்றளவில் பார்க்கின்றனர். இது நான் கண்ட அனுபவம். என் குழந்தையை புக் ஃபேர் கூட்டிச் சென்றேன் 2000 ரூபாய்க்கு புக்ஸ் வாங்கிக் கொடுத்தேன் என்பார்கள். ஆனால், அந்தக் குழந்தை அதை வாசிப்பதை அதன் பின்னர் உறுதி செய்யவே மாட்டார்கள். இதில் உங்கள் கருத்து?

வாங்கிக்கொடுப்பதைவிட முக்கியம் குழந்தைகளின் தேர்வு. அந்த ரூபாய் 2000க்கும் பெற்றோர்களே வாங்கிகொடுத்தால் நிச்சயம் குழந்தைகள் வாசிப்பது கேள்விக்குறியே. அதே சமயம் அந்த புத்தகத் தேர்வுகளில் குழந்தைகளின் கை இருந்தால் நிச்சயம் வாசிப்பார்கள். ஏனெனில் அது அவர்கள் தேர்வு செய்த புத்தகம். அதற்காகவே வாசிப்பார்கள். அதே போல வாங்கிய எல்லா புத்தகத்தையும் வாசித்துவிடுவார்கள் என்றும் நம்பிட வேண்டாம். நாமும் அப்படித்தானே. ஒவ்வொரு புத்தகத்திற்கு ஒரு காலமும் நேரமும் சூழலும் அமைய வேண்டும். ஆனால் நம்மைச்சுற்றி புத்தகங்கள் இருக்க வேண்டும்.

குழந்தைகளும்கூட கதை கேட்பதைக் காட்டிலும் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்ப்பதிலும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் பார்ப்பதிலுமே ஆர்வம் காட்டுகின்றனர்? காட்சிக்கும் ஓசைக்கும் அப்படி என்ன வேறுபாடு? ஏன் காட்சியை ரசிக்கும் அளவுக்கு குழந்தைகள் கதைகளை ரசிப்பதில்லை?

காட்சியை பார்க்கும்போது அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. காதுகளுக்கும் கண்களுக்கு மட்டுமே வேலை. அதே சமயம் கதைகளை வாசிக்கும்போது அது மூளைக்கும் வேலை. எழுத்தினை வாசித்து, கிரகித்து, அதனை காட்சிப்படுத்தி, யார் என்ன பேசுவார்கள், அந்த இடம் எல்லாவற்றையும் மனதிற்குள் உருவாக்கவேண்டும். காட்சிகள் ஒருவித சோம்பல்தன்மையை உருவாக்கிடும். இந்த சோம்பல் பழக்கப்பட்டுவிட்டால் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கும் அளவுக்கு கதைகளை ரசிக்காமல் போய்விடுவார்கள்.

கார்ட்டூன் குழந்தைகள் உலகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றி சொல்லுங்களேன்? கார்ட்டூனுக்கு என்னதான் மாற்று? கார்ட்டூன் பார்க்கலாமா கூடாதா?

காட்டூன்களை பார்ப்பது குற்றம் எல்லாம் இல்லை. அதுவும் கற்பனையை விரிவுபடுத்தும். கற்பனை செய்ய உதவும், ஆனால் அதற்கு அடிமையாகி விடக்கூடாது. கார்ட்டூன்களின் தேர்வும் அவசியம். ஏனெனில் அதில் நம் கலாச்சாரம், மொழி வெளிப்படுவது இல்லை. இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். பெரும்பாலான கார்ட்டூன்கள் மொழிபெயர்க்கப்பட்டவையே. நம் அறமும் சூழலும் வேறு. நம் அறத்துக்கு ஏற்ப கார்ட்டூன்களை வடிவமைக்க வேண்டும்.

குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைவதற்கான எளிய வழி கதைகள் மட்டுமே. அந்த கதவுக்கான திறவுகோளை அவர்களிடமிருந்து பெறுவதற்கு நாமும் குழந்தைகளாக மாற வேண்டும்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x