Last Updated : 28 Mar, 2019 12:04 PM

Published : 28 Mar 2019 12:04 PM
Last Updated : 28 Mar 2019 12:04 PM

எது கொடுத்தாலும் வாங்கிக்கிற நானும் என்ன சொல்ல?- ஓர் இளைஞனின் ஆதங்கமும் தட்டி எழுப்பும் விழிப்புணர்வும்

வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை மையப்படுத்தி இளைஞர் ஒருவர் உத்வேகப் பாடலைப் பாடியிருக்கிறார்.

இது தேர்தல் காலம். தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் பங்குனி தொடக்கத்திலேயே வாட்டி எடுக்கும் வெயிலைப் பற்றிதான் நாம் அனைவரும் பேசிக் கொண்டிருந்திருப்போம்.

தேர்தல் வந்துவிட்டதால் வேட்பாளர்களைப் பற்றியும், அறிக்கைகளைப் பற்றியும் அலசிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் முக்கால்வாசி கவனம் ஓட்டுக்கு நோட்டைத் தடுப்பதில்தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தெருவோரக் குழாயடிகளிலோ ஏண்டி.. காசு ஏதும் குடுத்தானுக என்ற பேச்சே இயல்பாய் இருக்கிறது. பணம் கொடுப்பதை தவறு என்று சொல்லாமல் அது உங்கள் காசுதான் வாங்கிக் கொள்ளுங்கள் ஓட்டை மட்டும் சிந்தித்துப் போடுங்கள் என்று எந்தக் கையும் தன் பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றன சில கட்சிகள்.

இந்தச் சூழலில்தான் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை ஆதங்கமாக வெளிப்படுத்தி அப்படியே விழிப்புணர்வையும் புகட்டிச் சென்றிருக்கிறார் ஓர் இளம் ராப் இசைக் கலைஞர்.

முதலில் பாடலைக் கேட்டுவிட்டு வாருங்கள்:

 

பாடலுக்கான லின்க்:

 

"பிரச்சினை பிரச்சினை எத்தன மெத்தனப் பேச்சு

அத்தனை நிலையில் உத்தமனும் போயாச்சு

கேக்கிற காது ஊருக்குள்ள செவிடாச்சு

ஒவ்வொரு ஓட்டும் இங்க நோட்டாச்சி

 

போதும்டா சாமி உங்க பாதுகாப்பு கரிசனம்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு ஆலோசன

இவன சொல்லனும் உன்ன சொல்லி குத்தமில்ல

எத குடுத்தாலும் வாங்கிக்கிற நானும் என்ன சொல்ல.." என்று நீள்கிறது வரிகள்.

சமூகத்தில் நிலவும் அவலங்களை வரிசையாகப் பட்டியலிடும்போது ஓட்டுக்கு காசு வாங்குவதையும் சேர்த்தே பட்டியலிடுகிறார் திரையில் வரும் அந்த இளைஞர். இந்தப் பாடலை எழுதிப் பாடிய அந்த இளைஞரின் பெயர் சுனில்குமார். ஆனால் இவரை என்கேடி (NKD) என்றே அழைக்கின்றனர். பாடல் குறித்தும் அவரது சமூகப் பார்வை குறித்து அவரிடமே கேட்டபோது துடிப்பான இளைஞராக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...

என் பெயர் சுனில்குமார். அப்பா பெயர் கடற்கரையாண்டி. அப்பா பெயரும் என்னுடன் சேர்ந்தே விளங்க வேண்டும் என்று எனது பெயரில் உள்ள னில் என்பதை எடுத்துக் கொண்டு நில்கடற்கரையாண்டி என வைத்துக் கொண்டேன். அதன் சுருக்கம் என்கேடி என நிலைத்து விட்டது. நான் தமிழர். பிறந்து வளர்ந்து படித்தது மும்பையில். தாராவியில் வீடு இருக்கிறது. இப்போது சென்னயில் சவுண்ட் இன்ஜினீயராக வேலை செய்கிறேன்.

தாராவியில் இருந்தபோதே ராப் பாடல்களை எழுதி இசையமைக்கத் தொடங்கினேன். என்னுடன் எனது நண்பர் காதல் ஜேக் (ஐயனார்) உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொண்டனர். அவர்கள் சீக்கிரம் குவிக் (சுதீஷ்), கருப்பு வைரம் (ராஜா).

நாங்கள் நால்வரும் சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசுவோம், எழுதுவோம் அதையே பாடலாக வடித்துப் பாடுவோம் என்ற கருத்து ஒற்றுமையால் இணைந்துள்ளோம். கச்சேரி மூவ்மென்ட் என்று எங்கள் குழுவுக்கு பெயர் வைத்துள்ளோம்.

உள்ளூர் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். சென்னை வந்த பின்னர் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நட்பு கிடைத்துள்ளது. இப்போது தேர்தல் காலம் என்பதால் காரணம் யார்? என்ற இந்தப் பாடலை எழுதி பாடியிருக்கிறேன். இதற்கான இசை யூடியூபில் உள்ள ஃப்ரீ பீட்ஸில் இருந்து எடுத்துக் கொண்டேன். எழுத்துக்கள் என்னுடையவை.

அது என்ன கச்சேரி மூவ்மென்ட்? வித்தியாசமாக இருக்கிறதே!

ராப் இசை என்றாலே மக்கள் ஆங்கிலப் பாடலுக்கானது என்று நினைக்கின்றன. ராப் இசையை மக்களிசையாக மாற்ற வேண்டும் என்பது எங்கள் கனவு. அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் எளிமையான பெயராக இருக்க வேண்டும். கச்சேரி என்பது எல்லா மக்களும் அறிந்த வார்த்தை. பாட்டு கச்சேரி என்று மட்டும் நின்றுவிடாமல் அது ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்பதற்காக கச்சேரி மூவ்மென்ட் என்று பெயர் வைத்தோம்.

ஓட்டுக்கு நோட்டு.. இதைப் பற்றியும் பாடியுள்ளீர்கள். நேரடியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நானும் என்ன சொல்ல? நானும் என்ன சொல்ல? என்று அந்தப் பாடலில் கேட்டதையேத்தான் திரும்பவும் கேட்கிறேன். எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு உங்கள் ஓட்டை விற்பனை செய்தீர்கள் என்றால் நான் என்ன சொல்ல முடியும். தேர்தல் ஒவ்வொரு முறையும் வந்து போகிறது. ஆனால், உங்களுடைய பிரச்சினைகள் எப்போதாவது தீர்ந்திருக்கிறதா? எப்போதாவது ஏழை, பணக்காரர், உயர் சாதி, தாழ்ந்த சாதி, படித்தவன், படிக்காதவன் என்ற ஏற்றத்தாழ்வு ஏன் நீடித்துக் கொண்டே இருக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? இதை யோசித்து காரணம் யார் என்று உணருங்கள். சிந்தித்து வாக்களிங்ள் என்பதே நான் சொல்ல விரும்புவது.

தமிழ் ராப் பாடுகிறீர்கள், சமூக சிந்தனை கொண்டுள்ளீர்கள், உங்கள் வாசிப்பு எப்படி?

மும்பையில் மராட்டியும் இந்தியும் ஆங்கிலமும் மட்டும்தான் பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. வீட்டில் பேசுவதால் தமிழ் பேசுகிறேன். ஒரு தமிழாசிரியரிடம் தமிழ் எழுதப் படிக்கக் கற்றேன். அதைக் கொண்டுதான் தமிழ் பாடல்கள் எழுதுகிறேன். மார்க்ஸைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் பாடல்களுக்கான ஆதாரம் என்ன?

என்னைச் சுற்றியுள்ள கதைகள், என்னைச் சுற்றியுள்ள மக்களின் கண்ணீர், என்னைச் சுற்றியுள்ள மக்களின் கேள்விகள் அவைதான் என் பாடல்களுக்கான தளம். இங்கே இருக்கும் அரசியலமைப்புகளால் மக்களின் கண்ணீருக்கும், கதைகளுக்கும், கேள்விகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆரம்பத்தில் தாராவியில் நான் விவசாயிகள் பிரச்சினைகளைப் பற்றி பாடும் போது கோமாளி என்றனர். ஆனால், கோமாளிகள் அல்ல நீங்கள் ஏமாளிகளாகாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தவர்கள் என்பதை புரியவைத்திருக்கிறோம். இதை தேசம் முழுவதும் எடுத்துச் செல்வோம்.

ஓர் இளைஞனாக இளம் வாக்காளர்களுக்கு உங்களின் அறிவுரை?

உங்கள் வாக்கை பணத்தால் ஈடு செய்ய முடியாது. உங்கள் வாக்கால் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும். வாக்களியுங்கள். சிந்தித்து சரியான நபருக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அந்த இளைஞர் கூறினார்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x