Last Updated : 05 May, 2018 05:07 PM

 

Published : 05 May 2018 05:07 PM
Last Updated : 05 May 2018 05:07 PM

நாடாளுமன்றத் தேர்தல் சடுகுடு: ‘மூன்றாவது அணி மந்திரம்’ - என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?

அண்மையில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள், தமிழக அரசியலில் அதிக பரபரப்பு இல்லாவிட்டாலும், அடுத்தடுத்து பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. இது அடுத்த கட்டத்திற்கு எப்படி நகருமோ? என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நிகழ்வுகளும் இந்திய அரசியலை விடவும், தமிழக அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு.

சென்னையில் ஸ்டாலின் வீட்டிற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வந்ததும், இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகில இந்திய அளவில் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டு வரும் திமுக, சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சிக்கு கைகொடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்தது.

இது, தேர்தல் கூட்டணி அல்ல என திமுக மறுத்தாலும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில்தான் அறிவிப்போம் என்று சொல்கிறது திமுக தலைமை.

இந்த பரபரப்பு ஏற்படுத்திய அடுத்த இருநாட்களில் திமுகவின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தராம் யெச்சூரியுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸை தனிமைப்படுத்தி மூன்றாவது அணி என்று முழக்கமிடுவது பாஜகவின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும் என சந்திப்புக்குப் பின் திருமாவளவன் பேட்டியளித்தார். இதே விஷயத்தை அழுத்தம் திருத்தமாக யெச்சூரியும் கூறியுள்ளார்.

சரி! மூன்றாவது அணி தொடர்பான முயற்சிகள் திடீரென வேகமெடுக்க என்ன காரணம்? இதை கொஞ்சம் அலசும் முன்பாக, தற்போதைய அரசியல் சூழல் கொதிநிலையையும் இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 2019-ம் ஆண்டு இதே மே மாதத்தில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒராண்டு மட்டுமே உள்ளது.

பாஜக மதவாத சிந்தனை, பொருளாதார சீர்கேடு, மக்கள் விரோத செயல்பாடு எனக் கூறி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாவிட்டாலும், வலிமையான எதிர்க்கட்சியாக அமர்ந்த பின் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் வேகமெடுத்தன.

அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வசதியாக காங்கிரஸ் தலைமைப் பதவியையும் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார். அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க வேண்டியது மட்டும்தான் மிச்சம். காங்கிரஸின் இந்த முயற்சிக்கு, மற்ற பல கட்சிகளும் கைகோர்த்து பாஜகவை எதிர்க்க தயாராகின/ காரியங்கள் எல்லாம் வேகமாக நடந்து வந்தன.

இந்த நிலையில்தான் தற்போது மூன்றாவது அணி சலசலப்பு வேகமெடுத்து வருகிறது. தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், இரு மாதங்களுக்கு முன், மூன்றாவது அணி என்ற பேச்சைத் தொடங்கினார். அவரது கருத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் ஆதரவுக் கரம் நீட்ட, காங்கிரஸ் - பாஜகவுக்கு மாற்றாக புதிய அணி என்ற கோஷம் விரிவடையத் தொடங்கியது.

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் காங்கிரஸுக்கு சற்றே எரிச்சல்தான். ஆனாலும், இது சந்திரசேகர் ராவின் வீண் முயற்சி, என்று காங்கிரஸ் பெரிய அளவில் கவலைப்படவில்லை. அதேசமயம் மூன்றாவது அணிக்கு ஃபெடரல் முன்னணி என பெயர் சூட்டிய முயற்சிகள் வேகமெடுத்தன.

மாநிலக் கட்சிகளின் இந்த முயற்சிக்கு திமுகவும் வரவேற்பு அளிக்க, தற்போது ஃபெடரல் முன்னணி அடுத்தகட்டத்தை நோக்கி பயணப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இதனை சாதாரணமாக எண்ணி எள்ளி நகையாடிய காங்கிரஸுக்கும் தற்போது அச்சம் தான்.

இப்போது மூன்றாவது அணி உருவாகக் காரணத்தைத் தேடலாம்.

உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்

mayavathi akileshjpgjpgமாயாவதி - அகிலேஷ் யாதவ்100 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல் என்பது மாநிலக் கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தேர்தலுக்குப் பின்பு தான், மூன்றாவது அணியை உருவாக்கும் திட்டங்கள் அரங்கேறத் தொடங்கின.

இந்த தேர்தலில் இருபெரும் மாநில கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் ஒன்று சேர்ந்ததன் மூலம் பாஜகவை வீழ்த்தின. உ.பி. தேர்தல் உணர்த்தும் பாடம் மாநில கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜகவுக்கு மாற்றாக தன்னைப் பிரகடனப்படுத்தும் காங்கிரஸ் அதனை சரியான முறையில் உறுதிசெய்ய முடியவில்லை. 2014 மக்களவை தேர்தலுக்குப் பின் நடந்த ஒவ்வாரு மாநில தேர்தலிலும், காங்கிரஸ், பாஜகவிடம் தோல்வியையே தழுவியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தலிலும், வெற்றியை அக்கட்சியால் ஈட்ட முடியவில்லை.

இதனால், மக்களவையில் தற்போதுள்ள நிலையையும், வரும் தேர்தலில் காட்சிகள் மாறுவதற்கான சூழலையும் அரசியல் பார்வையாளர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். மக்களவையில் மொத்தமுள்ள 545 தொகுதிகளில் 282 இடங்களில் பாஜக தன் வசம் வைத்துள்ளது. காங்கிரஸுக்கு 44 இடங்கள் மட்டுமே உள்ளன.

2019-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸால் அதிகபட்சமாக 100 இடங்கள் என்ற அளவில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது மாநிலக் கட்சிகளின் கணக்காக உள்ளது. அதேசமயம் மாநிலக் கட்சிகள் கூட்டாக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியும் என திடமாக நம்புகின்றன. இருவரும் சேர்ந்தால் பாஜவை மீண்டும் ஆட்சியில் அமர விடாமல் செய்ய முடியும்.

பிறகு என்ன? இருதரப்பும் இணைய வேண்டியதுதானே? எனக் கேட்கலாம். ஆனால் 100 இடங்களை மட்டும் வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அரியணையில் ஏன் ஏற்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் மாநிலக் கட்சிகளின் எண்ணமாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற அக்கறை காங்கிரஸுக்கு இருக்குமானால், அவர்கள் நம்மை ஆதரிக்கட்டுமே என மம்தா போன்றவர்கள் எண்ணுகின்றனர்.

பாஜகவைத் தடுத்து நிறுத்தும் செல்வாக்கு காங்கிரஸுக்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் மாநிலக் கட்சிகள் வலிமையாக எழுப்புகின்றன. காங்கிரஸ் ஓட்டிழப்பு என்பது பாஜகவின் ஓட்டு சேர்ப்பாகவே மாறி வருகிறது.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியைப் பறிகொடுத்தாலும் ஓட்டு இழப்பைச் சந்திக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்த இடத்தை பாஜக கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துக்கொண்டது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், நடந்த பல மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும், இதே நிலைதான் தொடர்கிறது. எனவே காங்கிரஸை தங்கள் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மாநிலக் கட்சிகளின் திட்டம்.

பாஜக - காங்கிரஸ் நேரடி மோதல்

மொத்தம் 8 மாநிலங்களில் மட்டும்தான், பாஜகவும், காங்கிரஸும் நேரடியாகக் களம் காண்கின்றன. இங்கெல்லாம் கடந்த முறை பெரும்பாலான இடங்களை பாஜகவே கைப்பற்றியுள்ளது. மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஏற்கெனவே பாஜக தான் ஆட்சியிலும் உள்ளது. இரு கட்சிகளும் வலிமையாக உள்ள மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அதுவும், தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தனது நிலையைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.

கோலோச்சும் மாநிலக் கட்சிகள்

அதேசமயம் பாஜகவுடன், மாநிலக் கட்சிகள் 15 மாநிலங்களில் மோதும் சூழல் உள்ளது. அங்கு காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார், தெலங்கானா, ஒடிசா, ஹரியாணா, ஜார்கண்ட், டெல்லி என இந்த மாநிலங்களில் பாஜகவின் வெற்றியைத் தடுத்தால் மட்டுமே அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுக்க முடியும். அதை மாநில கட்சிகளால் மட்டுமே செய்ய முடியும்.

தமிழகம், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில் பாஜக - காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளுக்குமே வாக்கு வங்கி இல்லாத சூழல். இந்த மாநிலங்களில் ஆள்வது, எதிர்ப்பது இருதரப்புமே மாநிலக் கட்சிகள் தான். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மாநிலக் கட்சிகள் மோதும் 15 மாநிலங்கள் மிக முக்கியமானவை என அரசியல் வல்லுநர்களும் கூறுகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிட்டால் மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது வாக்குவங்கியை அதிகரித்து, மாநிலக் கட்சிகளுக்கு சவால் விடும் நிலையில் உள்ளது. இருந்தாலும் வலிமையான வாக்கு வங்கியை வைத்துள்ள மாநிலக் கட்சிகளும், பாஜகவுக்கு சரியான சவாலைக் கொடுத்து வருகிறது.

பிரதமர் வேட்பாளர்

இந்த சூழலில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து அவரது தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மாநில கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பாக ஃபெடரல் முன்னணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திப்பதும், தேர்தலுக்குப் பின் மாநிலத் தலைவர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும் அக்கட்சிகள் திட்டமிடுகின்றன.

ஆனால் மாநிலக் கட்சிகளின் இந்த முயற்சி பாஜகவின் வெற்றிக்கே வழி வகுக்கும் என காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி இடதுசாரித் தலைவர்களும் இந்த கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அப்படி நிகழ வாய்ப்புள்ளதா? அல்லது மாநில கட்சிகளின் எண்ணம் நிறைவேறுமா?

தேசிய அளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா? அப்படி அமைந்தால் என்ன தாக்கம் ஏற்படும்?

(தொடரும்)

தொடர்புக்கு: janarthanaperumal.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x