

காசநோய்.. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் இருக்கிறது. சில புள்ளிவிவரங்கள் 3500 ஆண்டுகளாகவே காசநோய் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிடுகிறது. காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' (Mycobacterium tuberculosis) என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது.
இந்தியாவில் பொது சுகாதாரத்துக்கு பெரும் சவாலாக இருந்த பல நோய்கள் இன்று கட்டுக்குள் வந்துவிட்டன. இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ ஒழிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இந்தியாவில் காசநோய் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.
உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட 2016-ம் ஆண்டுக்கான காசநோய் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 2016-ல் சராசரியாக 2.79 மில்லியன் பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 4,80,000 பேர் காசநோய்க்கு உயிரை இழந்துள்ளனர். காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் 40% மக்களுக்கு காசநோய் கிருமியின் தொற்று உடலில் இருக்கிறதாம். ஆனால் அது நோயாக மாறாத உள்ளுறைந்த தொற்றாக இருக்கிறதாம். இதை லேட்டன்ட் டிபி (latent TB) என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய தொற்று இருப்பவர்களால் நிச்சயம் நோய் பரவுவதில்லை. ஆனால், இவர்களில் சில பிரிவினர் அதாவது உள்ளே மறைந்திருக்கும் தொற்று நோயாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்தால் காசநோயை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
எது காசநோய்?
இன்றளவும் காசநோய் என்றால் அது கொடிய தொற்றுநோய் என்ற எண்ணமும். காசநோயாளியை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற நடைமுறையும்தான் இருக்கிறது.
சென்னை, அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குநர் ஏ.மகிழ்மாறன் காசநோய் குறித்து கூறும்போது, "2 வாரங்களுக்கு மேல் இடைவிடாத இருமல், காய்ச்சல், உடல் எடை குறைதல், இரவு நேரங்களில் வியர்வை இவையெல்லாம் காசநோயின் அடிப்படை 4 அறிகுறிகள். இதே குழந்தைகளாக இருந்தால், 2 வாரத்துக்கும் மேலான இருமல், வயதுக்கு ஏற்ற உடல் எடை கூடாமல் இருப்பது, காய்ச்சல் மற்று சோர்வு. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காசநோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். இந்தியாவில் இப்போதெல்லாம் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான் காசநோய் தொற்று அதிகமாக ஏற்படுகிறது. காசநோய் நிச்சயமாக குணப்படுத்தக்கூடிய நோய். ஆனால், அதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்களில் காசநோய் மீது இருக்கும் அச்சத்துக்குக் காரணம் அதன் பரவும் தன்மை. நுரையீரல் காசநோய் வந்தவர்களின் சளி, இருமல், தும்மலில் இருந்து காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காச நோய் ஏற்படுகிறது. மற்ற உடல் உறுப்புகளில் காசநோய் ஏற்பட்டால் அவர்கள் மூலம் காசநோய் பரவுவது இல்லை. நுரையீரல் காசநோய் ஏறபட்டவரின் சளியில் இருந்து குறைந்தது 10 பேருக்காவது இந்த நோய் பரவும் தன்மை உடையது. அதேவேளையில், அந்த நபர் காசநோய் சிகிச்சையை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டால் அடுத்த 10-வது நாளே காசநோயை பரப்புவராக அவர் இருக்க மாட்டார். அதன் பின்னர் அவரது உடல் நிலையைப் பொறுத்து 6 மாதங்களோ அல்லது 8 மாதங்களோ அவருக்கு சிகிச்சை அளித்தால் அவர் பரிபூரண குணமடைந்துவிடுவார்" என்றார்.
காசநோய் குணமடைய மருந்துடன் சத்தான உணவு உட்கொள்வதும் மிக மிக அவசியம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் முட்டை, ஆட்டிறைச்சி போன்ற உணவு வகைகளையும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் பருப்பு போன்ற புரதச்சத்து அதிகமுள்ள உணவையும் உட்கொள்வது அவசியம்.
'திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம்'
திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் Revised National Tuberculosis Control Programme (RNTCP) இத்திட்டம் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் காசநோயை கண்டறியும் சோதனை முதல் சிகிச்சை வரை அத்தனையும் நோயாளிக்கு இலவசமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளில் இந்த மருத்துவ சேவை அமலில் உள்ளது. 'டாட்ஸ்' (DOTS) என்று அழைக்கப்படும் 'கூட்டு மருந்துச் சிகிச்சை' அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் காசநோய் சிகிச்சைக்கு 5 நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
1. காசநோயாளியாக கண்டறியப்படுபவர்களுக்கு இலவசமாக மருந்து வழங்குதல்
2. அந்த நோயாளி மருந்துகளை உட்கொள்கிறாரா எனத் தொடர்ந்து கண்காணித்தல் (இதற்காக ஒவ்வொரு முறை நோயாளி மருந்து வாங்க வரும்போதும் முன்னதாக கொடுக்கப்பட்ட மருந்து அட்டையைக் கொண்டுவர வேண்டும். இதன்மூலம் அந்த நோயாளி மருந்துகளை ஒழுங்காக உட்கொள்கிறாரா எனக் கண்காணிக்கப்படுகிறது)
3. காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
4. மருந்துகளை உட்கொண்ட நோயாளிக்கு அவ்வப்போது சளி மாதிரி பரிசோதனை செய்தல்.
5. X-ரே எடுத்து நோய்த் தொற்று நீங்கிவிட்டதா என பரிசோதிப்பது.
இப்படி ஒரு நோயாளி முழுவதுமாக குணமடையும் வரை அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
முக்கியத்துவம் பெறும் 'ஹெல்த் விசிட்டர்':
காசநோயாளிகளுக்கான சிகிச்சையை முழுமையாகச் சென்றடையச் செய்வதில் 'ஹெல்த் விசிடர்' என்ற பொறுப்பில் இருப்பவர்களின் பணி குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக காசநோயாளியாக கண்டறியப்படும் ஒரு நபர் இந்த ஹெல்த் விசிட்டரிடம் தான் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முதன் முறை சிகிச்சைக்கு வரும் கேட்டகிரி 1 நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கான பிரத்யேக மருந்துப் பெட்டியில் 6 மாதங்களுக்கான மாத்திரை, மருந்துகளும் இருக்கும். ஆனால், அதை மொத்தமாக நோயாளியிடம் கொடுத்துவிடுவதில்லை.
நோயாளியின் பெயர், முகவரி, தொடர்பு எண், அவருடன் வரும் உறவு / நட்பு வளையத்தில் இருப்பவரின் தொடர்பு எண்ணைப் பெற்றுக் கொள்ளும் ஹெல்த் விசிடர். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்துகளை வழங்குவார். அடுத்தமுறை அந்த நோயாளி மருந்து வாங்க வரும்போது காலி அட்டைகளை அவரிடம் காட்ட வேண்டும்.
ஒருவேளை அந்த நபர் மருந்து வாங்க வரவில்லை என்றால் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு விசாரிப்பார். அப்போதும் பலன் இல்லை என்றால் நோயாளியின் வீட்டுக்கு நேரில் சென்று மருந்துகளை வழங்குவார். இந்த வகையில் காசநோய் சிகிச்சையில் ஹெல்த் விசிட்டரின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
'ஹெல்த் விசிட்டர் இப்படி செயல்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இது முழுமையாக நடைமுறையில் இல்லை. ஹெல்த் விசிட்டர் பணி முழுமையாக செய்யப்பட்டால் அது நிச்சயம் காசநோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.
ஏனெனில், சிகிச்சைக்கு வந்த 2 மாதங்களில் நோயாளிக்கு நோய்க்கான அறிகுறிகள் வெகுவாக குறைந்துவிடுவதால் நோயே சரியாகிவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். இதனால், மருந்துகளை உட்கொள்வதையும் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இது பேராபத்து. முதல் நிலை - கேட்டகிரி 1 காசநோயாளிகள் பாதியில் மருந்து உட்கொள்வதை நிறுத்தினால். அதுவரை அந்த மாத்திரைக்கு கட்டுப்பட்ட கிருமி அடுத்து அதே மருந்துக்கு கட்டுப்படாமல் போய்விடும். இதனால், அவர்கள் இரண்டாம் நிலையான (Multi Drug Resistance TB), மிகவும் மோசமான நிலையான (Extreme Drug Resistance TB) என்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.
இந்த நிலைக்கு நோயாளி செல்வதை தடுக்க வேண்டுமானால் அது ஹெல்த் விசிட்டர்கள் முழுவீச்சில் செயல்பட்டால் சாத்தியமாகும் என்றார் டாக்டர் மகிழ்மாறன்.
காசநோய் இல்லாத இந்தியா சாத்தியமே..
போலியோ ஒழிப்பு எப்படி நமக்கு சாத்தியமானதோ அதேபோல் காசநோய் ஒழிப்பும் நமக்கு சாத்தியமே. அதற்கு, அரசாங்கத்தின் திட்டங்களும் நோயாளிகளின் ஒத்துழைப்பும் கூடவே பொதுமக்களின் சமூக அக்கறையும் ஒருசேர வேண்டும்.
இதை சாத்தியப்படுத்தவே, தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் நீட்சியாக 'காச நோய் இல்லாத சென்னை'-யை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ‘ரீச்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, யுஎஸ்ஏஐடி மற்றும் ஸ்டாப் டிபி பார்ட்டனர்ஷிப் எனும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக காச நோயை துரிதமாக கண்டறியப்படும். 2-ம் கட்டமாக அந்நோயாளிக்கு 6 அல்லது 8 மாதங்கள் சிகிச்சை அளித்து குணமடையும் வரை ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து உணவுக்கு ஏற்பாடு செய்யப்படும். 3-ம் கட்டமாக காச நோய் எளிதில் அதிகம் தாக்கும் குடிசைவாழ் மக்களுக்கு, அங்கேயே சென்று பரிசோதனை செய்யப்படும். இதற்காக 7 நடமாடும் வாகனங்கள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்படியான திட்டத்தை படிப்படியாக நாடுமுழுவதும் செயல்படுத்தினால் காசநோய் இல்லாத இந்தியா நமக்கு சாத்தியமாகும்.