Last Updated : 23 Oct, 2017 08:14 PM

Published : 23 Oct 2017 08:14 PM
Last Updated : 23 Oct 2017 08:14 PM

ஜோசப் விஜய் எங்கள் எதிரி இல்லை; அவரது பொய்யைத் தான் எதிர்க்கிறோம்: ஹெச்.ராஜா

 

'ஜோசப்' விஜய் எங்கள் எதிரி இல்லை. அவரது பொய்யைத் தான் எதிர்க்கிறோம் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

'மெர்சல்' திரைப்பட சர்ச்சை தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் ட்விட்டர் தளத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் நடிகர் விஜய்யை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

மெர்சல் எதிர்ப்பு ஏன்.. விஜய் மீதான காட்டம் ஏன் என்பன குறித்து எச்.ராஜாவிடம் கேட்டோம். அவர் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்குப் பேட்டி அளித்தார்.

'மெர்சல்' எதிர்ப்பு விஜய் என்ற தனிநபர் மீதான எதிர்ப்பாக மாறியிருக்கிறதே ஏன்?

'ஜோசப்' விஜய் எங்கள் எதிரி இல்லை. அவர் பரப்பும் பொய்யைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 'ஜோசப்' விஜய்க்கு வாழ்த்து சொல்வேன். தமிழகத்தில் ஜன சங்கத்தை நிறுவிய டாக்டர் வி.கே.ஜான் ஒரு கிறிஸ்தவர். கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் விஜய்யை எதிர்க்கவில்லை. கோயில்களுக்குப் பதிலாக கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளும் கட்டச் சொல்லும் 'ஜோசப்' விஜய்யை கேள்வி கேட்டால் கொந்தளிக்கும் ஊடகங்கள் தேவாலயங்களுக்கு பதில் பள்ளிகள் கட்ட வேண்டும் என்று நான் ஒரு கருத்து சொல்லியிருந்தால் எனக்கு மதவாதி பட்டம் தந்திருக்கும்தானே.

'ஜோசப்' விஜய் என மத ரீதியிலான தாக்குதலை ஏன் தொடர்ந்து முன்வைக்கிறீர்கள்?

விஜய்யின் முழுப்பெயர் ஜோசப் விஜய் தானே. அவரது வாக்காளர் அடையாள அட்டையில் அப்படித்தானே இருக்கிறது. அவரது முழுப் பெயரை நான் குறிப்பிட்டு அழைக்கிறேன். அதில் ஊடகங்கள் இப்படி பதற்றம் கொள்வது ஏன்? என்னை யாராவது ஹரிஹரன் ராஜா என அழைத்தால் நான் இயல்பாகவே இருப்பேன்.

மத ரீதியிலான தாக்குதலை தவிர்த்து விஜய் என்றே அழைக்கலாமே?

நான் ரொம்ப அப்பாவி. எனக்கு அகட விகடம் எல்லாம் தெரியாது. அதனால் விஜய்யை அவரது முழுப் பெயரால் அழைக்கிறேன்.

தேசிய அளவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நீங்கள் மதத்தின் பெயரால் கருத்துகளை பகிர்வது கட்சியை பலவீனப்படுத்தாதா?

ஒரு கிறிஸ்தவரை கிறிஸ்தவர் எனக் குறிப்பிடுவது மதவாத அரசியல் அல்ல. இந்த உண்மையைச் சொல்வதால் எங்கள் கட்சிக்கு எந்த பலவீனமும் இல்லை.

தமிழகத்தில் பாஜக காலூன்றாத நிலையில் இத்தகைய சர்ச்சைகள் பாஜகவை வலுவிழக்கத்தானே செய்யும்?

நிச்சயமாக செய்யாது. நாங்கள் ஒரு பொய்யை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். 'ஜோசப்' விஜய்யின் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் பொய்யை பரப்புகின்றன. சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் இல்லை. அதேபோல் மதுபானங்களுக்கு வரி இல்லை எனக் கூறுவதும் பொய்ப் பிரச்சாரம். மதுபான வகைகளுக்கு 270% வரை வரி இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து ஒரு விஷயத்தை வலியுறுத்திப் பேசுவது எங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தவே. பிரச்சினையைச் சார்ந்தே எதிர்ப்பை பதிவு செய்கிறோம். தனிநபர் சார்ந்து அல்ல.

அப்படி என்றால் எதற்காக விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையைப் பொதுவெளியில் பகிர்ந்தீர்கள்? அது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது அல்லவா?

'ஜோசப்' விஜய்யின் சட்டைப் பையில் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துவந்து பகிரவில்லையே. சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டதையே நான் பகிர்ந்தேன். அதில் என்ன அத்துமீறல் இருக்கிறது.

‘மெர்சல்’ படத்தை ஆன்லைனில் பார்த்தேன் என்று பகிரங்கமாக கூறினீர்களே? வருத்தம் இல்லையா?

சர்ச்சை கருத்துகள் அடங்கிய காட்சிகளை ஆன்லைனில் பார்த்தேன் என்றுதான் சொன்னேன். முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்த்தேன் என்று சொல்லவில்லை. எனக்கு அதற்கான நேரமும் இல்லை. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

சினிமா பார்ப்பது நேர வீணடிப்பா?

குடும்பத்துடன் திரையரங்குகளில் நானும் சில சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அது குடும்பத்துடன் பொழுதைப்போக்குவதற்காக. இப்போது எனக்கு அவ்வளவு நேரம் இல்லை என்பதால்தான் நேரத்தை வீணடிக்க முடியாது என்கிறேன். நான் எந்தப் படத்தையும் இணையத்தில் பார்த்ததில்லை என்பதை இங்கே 'தி இந்து' தமிழ் இணையதளம் வழியாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

'மெர்சல்' படத்துக்கு தேசிய அளவில் இலவச விளம்பரம் தேடித்தந்த பாஜகவுக்கு படக்குழு நன்றி தெரிவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே?

தேசிய அளவில் பேசப்படுவதெல்லாம் பாராட்டுக்குரியது என்றால் டிடிவி திஹார் சென்றதும் தேசிய அளவில் பேசப்பட்டது. அதற்காக டிடிவி தினகரன் ஸ்டார் ஆகிவிடுவாரா?

உங்கள் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழகத்தில் சலசலக்கப்பட்டதை அடக்கவே 'மெர்சல்' சர்ச்சையால் திசை திருப்புகிறீர்கள் என்ற விமர்சனம் பற்றி உங்கள் கருத்து?

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதாகத்தான் இருக்கும். அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் மீது ரூ.100 கோடி அளவுக்கு அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். நியாயம் தன் பக்கம் இருப்பதால்தானே அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

விஜய், மெர்சல், அமித் ஷா என பல்வேறு கேள்விகளுக்கும் ஹெச்.ராஜா தனக்கே உரித்தான பாணியில் பதில்களைத் தந்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x