

வாழைப்பழத்தையும் வாழைக்காயையும் பயன் படுத்தும் அளவுக்குச் சிலர் வாழைப்பூவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதன் துவர்ப்புச் சுவை காரணமாகக் குழந்தைகளும் வாழைப்பூவை அவ்வளவாக விரும்பிச் சுவைப்பதில்லை. “அறுசுவையும் உடலுக்கு வேண்டும். துவர்ப்பை ஒதுக்கிவைப்பது நல்லதல்ல. சமைக்கிற விதத்தில் செய்துகொடுத்தால் தினமும் வாழைப்பூவைச் சாப்பிடத் தோன்றும்” என்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. வாழைப்பூவில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
சமோசா
என்னென்ன தேவை?
வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) – 1 கப்
உருளைக் கிழங்கு – 5
வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மைதா மாவு – 2 கப்
கரம் மசாலா (விரும்பினால்) – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாழைப்பூவையும் உருளைக் கிழங்கையும் தனித்தனியாக வேகவைத்து எடுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் மிளகாய்த் தூள், மசித்த உருளைக் கிழங்கு, வாழைப்பூ, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகச் சுருள வதக்கி ஆறவிடுங்கள். மைதாவைக் கெட்டியாகப் பிசைந்து சிறு கிண்ணங்கள் போல் செய்து அவற்றினுள் உருளை – வாழைப்பூ மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடியுங்கள். இவற்றை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.