Revelations: க்ரைம் வழியே அதிர்வூட்டும் உளவியல் உண்மைகள் | ஓடிடி திரை அலசல்

Revelations: க்ரைம் வழியே அதிர்வூட்டும் உளவியல் உண்மைகள் | ஓடிடி திரை அலசல்
Updated on
2 min read

ஒரு சிறுமி காணாமல் போகிறாள். சிறையில் இருந்து விடுதலையான பாலியல் குற்றவாளி ஒருவன் மீது சந்தேகம் செல்கிறது. அந்த குற்றவாளியால் தன் தங்கையை இழந்த பெண் போலீஸ் வழக்கை விசாரிக்கிறார். தனது தேவாலயத்தை சேர்ந்த சிறுமி காணாமல் போனதில் குற்றவாளியை தண்டிக்கும் நோக்கில் களமிறங்குகிறார் தேவாலய பாதிரியார்.

இந்த மூவருக்கும் அவரவர் வாழ்க்கை அனுபவம் சார்ந்து ஏற்பட்ட ஆழ்மனக் காயம் (Trauma) உள்ளது. சிறுமியை தேடும் படலம் வழியே இவர்களின் ஆழ்மனக் காயம் திரையில் விரிகிறது.

சிறு வயதில் வளர்ப்பு தந்தை நிகழ்த்திய வன்கொடுமையால் குரூர பாலியல் குற்றவாளியாகிப் போனவன். தங்கையை பாலியல் குற்றவாளியிடமிருந்து காப்பாற்ற முடியாததால் தீராத குற்றவுணர்வுக்கு ஆளாகி தவிக்கும் பெண் போலீஸ் அதிகாரி. உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ‘கடவுள்’ ஒரு காரணத்தோடே நடத்துகிறார் என்ற மத அடிப்படை நம்பிக்கையின்படி, சிறுமி காணாமல் போனதையும் அப்படியே அணுகும் பாதிரியார். இந்த மூவரின் ஆழ்மனக் காயமும் முறையே மூன்று சமூக நிலைகளை பிரதிபலிக்கிறது.

இவர்கள் மூவரின் உளவியல் பிரச்சினைகள் வழியே சமூகத்தில் நிலவும் குற்றங்களில் குடும்பம், மதம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பை நுட்பமாக குறுக்கு வெட்டு செய்கிறது படம்.

சமூகத்தில் அறம் பிறழ்ந்த இடத்தில் இருந்து உருவெடுக்கும் மனிதர்கள், குரூர குற்றவாளிகள் உற்பத்தியாக காரணமாக அமைகிறார்கள்.

குரூரர்களின் குற்றங்களானது, அறமிக்க மனிதர்களை ‘குற்றத்தை தடுக்க முடியா குற்றவுணர்வில்’ தவிக்க விடுகிறது.

மதம்: பிரச்சினைகளின் அசல் சமூக வேரை கண்டடைந்து தீர்ப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு நிகழ்வுகளும் கடவுளால் ஏதோ காரணங்களோடு, நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்று அணுகுகிறது.

குற்றங்களின் சமூக வேரை தீர்க்காமலிருப்பதிலே, ஒரு வகையில் மதங்களின் இருப்பு, வணிகம், அதிகாரம் தக்க வைக்கப்படுகிறது.

“குற்றங்களை உற்பத்தி செய்யும் சமூக காரணிகளும், அதன் வேரை களைய முற்படாமல் குற்றங்களில் ஆதாயங்கள் சேர்க்கும் சமூக நிறுவனமும் ஒன்று தான்” என்ற குறுக்கு வெட்டு சித்திரத்தை அழுத்தமாக முன்வைக்கிறது படம்.

திரைக்கதை எதிர்பாரா திருப்பங்களை ஏற்படுத்துவதை விட, சிறுமியை தேடும் படலத்தில் மூன்று நபர்களின் வேறுபட்ட ஆழ்மனக் காயங்களுக்கு இடை‌யிலான முரண்களில் விரிகிறது படம்.

இந்த உளவியல் உண்மைகள் மெள்ள மெள்ள திரையில் விரியும்போது ஏற்படும் அதிர்ச்சி, திடுக் திருப்பங்களுக்கு இணையானது.

திரையாக்கத்தின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக கூடி நிகழ்ந்திருக்கிறது. தவற விடக்கூடாத கொரிய திரைப்படம் ‘ரிவலேஷன்ஸ்’. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Revelations: க்ரைம் வழியே அதிர்வூட்டும் உளவியல் உண்மைகள் | ஓடிடி திரை அலசல்
Gladiator: ரிட்லி ஸ்காட் மேஜிக்கும், பிரமிப்பூட்டும் திரை அனுபவமும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in