Gladiator: ரிட்லி ஸ்காட் மேஜிக்கும், பிரமிப்பூட்டும் திரை அனுபவமும்!

Gladiator: ரிட்லி ஸ்காட் மேஜிக்கும், பிரமிப்பூட்டும் திரை அனுபவமும்!
Updated on
2 min read

பள்ளி நாட்களில் பார்க்க ஆரம்பித்தது, இப்போது வரை 13 முறை பார்த்திருப்பேன். பல படங்கள் முதல் முறை ஈர்த்தாலும் இரண்டாம், மூன்றாம் முறை பார்க்கும்போது இது இவ்வாறு ஒப்பேற்றப்பட்டிருக்கிறது என்பது துலக்கமாக தெரியும். ஆனால், ‘க்ளாடியேட்டர்’ (2000) படத்தை 13-வது முறையாக பார்க்கும் போதும், அதன் மீதான பிரமிப்பும் அதன் கலையாக்க நுண்மைகள் குறித்த புரிதலும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

முதல் போர்க் காட்சி ஆரம்பிக்கிறது. எந்த பிரம்மாண்ட இயக்குநரும் என்ன செய்வர்?

ஓடும் குதிரைகளின் காலடியிலிருந்து ஆரம்பிக்கும் கிரேன் அப்படியே உயர்நிலை கோணத்துக்குச் சென்று பட்டாலியன் ஸ்டேஜிங்கை பதிவு செய்யும். ஸ்காட் வேறு போல அணுகுகிறார்.

நாணல்களை வருடிச் செல்லும் மேக்ஸிமஸின் கை! போரில் கருகிய செடியில் அமர்ந்திருக்கும் சிட்டுக் குருவியை பார்த்து புன்னகைக்கும் மேக்ஸிமஸ், அப்படியே பட்டாலியனை வழிநடத்த செல்வார். அமைதியான வாழ்க்கைக்கான கனவுகளை கொண்ட ஓர் சிறந்த தளபதி இங்கு நிறுவப்பட, இதில் ஆரம்பிக்கும் படத்தின் உணர்ச்சிப்பூர்வ கட்டமைப்பு, மெள்ள வளர்ந்து அதன் உச்சத்தை அடைவதில் நிகழ்ந்ததோ மறக்க முடியாத திரையனுபவம்.

பயமற்ற அடிமை எதிர் பயத்தில் பரிதவிக்கும் அரசன் என்ற இந்த ஆட்டத்தில், பாதுகாக்கப்பற்ற உணர்வுடன் உழலும் அதிகாரம் பொருந்திய அரசன் ஒரு பக்கம். இழப்பதற்கு ஏதுமில்லா அடிமையின் அசாத்திய துணிச்சல் ஒரு பக்கம். இந்த முரணியக்கம் உருவாக்கும் உணர்ச்சிப்பூர்வ கட்டமைப்பு காட்சிக்கு காட்சி வளர்ந்து சென்று மேக்ஸிமஸ் யாரென வெளிப்படும் புள்ளியை அடையும் தருணத்தில் நிகழ்கிறது ரிட்லி ஸ்காட் மேஜிக்.

காட்சிகளின் தயாரிப்பு வடிவமைப்பு, ஜூனியர் நடிகர்கள் பயன்படுத்தப்பட்ட விதம் இவையெல்லாம் எல்லா நல்ல இயக்குநர்களும் செய்வதுதான். ஆனால் புறநிலை காட்சிகளை தொடங்கும் புள்ளி, அகநிலைக் காட்சிகளை தொடங்கும் புள்ளி, நிஜமும் இல்யூஷனும் சில காட்சிகளில் அளவான இணைப்புடன் கையாளப்பட்ட விதம் போன்றவற்றில் இருக்கிறது ஸ்காட் தனித்துவம்.

மேக்ஸிமஸ் என்ற வீரன் அரசன் முன்பு வெளிப்படும் மாஸ் தருணத்தை, திரையரங்கப் பார்வையாளர்கள் கோணத்தில் மிகைப்படுத்தவே எந்த பிரம்மாண்ட இயக்குநரும் முனைவர். ஆனால், ஸ்காட் அதனைத் தவிர்த்து, மைதான கேலரியின் மக்கள் கோணத்தில் மேக்ஸிமஸின் ஆகிருதியை அரசன் முன்பு நிலைநிறுத்தி, அரசனை கட்டுடைத்து அதன் வழியே பல மடங்கு உணர்ச்சி பெருக்கத்தை பார்வையாளருக்கு கொண்டு வந்திருப்பார்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வியப்பில் ஆழ்த்தக் கூடிய மானுட குலத்தின் சாதனை படைப்பு. மேற்கத்தியர்களுக்கு எப்படி இது வசமாகிறது என்று பலமுறை அதிசயத்ததுண்டு . அதற்கான விடை, மேற்கத்திய சினிமா மரபில் ‘க்ளாடியேட்டர்’ என்ற அப்பன் அவர்களுக்கு இருக்கிறான்! ஸ்காட் எனும் ஆசான்களின் ஆசான் அவர்களுக்கு இருக்கிறார்.

திரையில் தன் கதாபாத்திர அகநிலைகளை கடத்துவதற்கு, கதாபாத்திரங்களுக்கு இடையேயான உரையாடலை அதிகம் சாராத ரிட்லி ஸ்காட் திரைமொழியின் வேறு அம்சங்களை நுட்பமாக பயன்படுத்கிறார்.

ஸ்கார்சசியும் க்வண்டினும் தங்கள் கதாபாத்திர உளவியலை விளக்க உரையாடல்களை அதிகம் சார்ந்திருப்பர். கனமான மற்றும் ஸ்டைலிஷான உரையாடல்கள் அவர்களது முறைமை.

உரையாடல்களை அதிகம் சாராத ஸ்காட், தன் கதாபாத்திரம் என்ன பேசுகிறது என்பதை விட, என்ன உணர்கிறது என்பதை தன் ஸ்டேஜிங் வழியே மவுனம், கேமரா சட்டகம், ஒளி பயன்பாடு, சில சமயம் இணைப்புக் காட்சிகள் கொண்டு அழகியலோடு நிலைநிறுத்துகிறார். ஸ்காட் சினிமாக்கள் கொடுக்கும் அழகியல் அலாதி மற்றும் உணர்வனுபவம் இணையற்றது.

உலகம் முழுவதும் சினிமா கற்கும் பலருக்கும் முதன்மை ஆசான்களில் ஒருவர் ரிட்லி ஸ்காட்.

Gladiator: ரிட்லி ஸ்காட் மேஜிக்கும், பிரமிப்பூட்டும் திரை அனுபவமும்!
Chiraiya: மனைவியின் பெட் ரூம் ‘NO’ உரிமை பேசும் கமலேஷ் | திரை தேவதைகள் 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in