

“ஒரு சிறிய புறாவுக்கு போரா?! பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கின்றது!” - இது, தூது வந்த புறாவை வறுத்து தின்று விட்டு 23-ம் புலிகேசி மன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு புலம்பும் வசனம். அப்படி தினசரி வாழ்வில் முளைக்கும் சிறியதொரு பிரச்சினை ஒருவருக்கு பூதாகாரமாக மாறவும், எல்லா திசையிலும் அலைக்கழிக்க வைக்கவும் வாய்ப்புள்ளது.
ஒரு சிறிய கிராமத்தில், மகன் வாங்கித் தராத ஒரு பற்குச்சியால், அவரது முதிய தந்தையின் வாழ்வில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்தச் சம்பவங்ககளை, கதாபாத்திரங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் சொல்லியிருக்கும் புதிய தெலுங்கு திரைப்படம் தான் ‘பல்லபுருசு’ (பல் துலக்கும் குச்சி). இப்படம் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
தெலங்கானா மாநில குக்கிராமத்தில், மகனிடம் இருந்து விலகி தனித்து வாழும் ஷம்பு என்னும் முதியவருக்கு பல்லில் வலி ஏற்படுகிறது. அவர், பல் மருத்துவர் எழுதி தரும் பற்பசையையும் பல் குச்சியையும் வாங்கித் தரும்படி மகனிடம் கேட்கிறார். ரயில்வேயில் காப்பாளராக பணிபுரியும் மகன் அந்த சிறு உதவியை கூட செய்யாமல் உதாசீனப்படுத்துகிறார். அதை தாங்கிக் கொள்ள முடியாத ஷம்பு அதீதமாக ஒரு முடிவை எடுக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் நவீன காலத்தில் தனிமை ஏற்படுத்தும் அக உளைச்சல்களையும் சிரிக்க சிரிக்க திரை அனுபவமாக தந்திருக்கிறார் அறிமுக எழுத்தாளர் இயக்குநர் உதய் சவுகான்.
இந்தியத் திரைப்படங்களில் இன்னும் சொல்லப்படாத எளிய கிராமத்துக் கதைகள் ஏராளம். தமிழில் ‘முண்டாசுப்பட்டி’, ‘கிடாயின் கருணை மனு’ போலவே தெலுங்கில் ‘c/o காஞ்சிரபாலம்’, ‘பலகம்‘, ‘பேண்ட் மேளம்’ சில உதாரணங்கள். அந்த வரிசையில் அழகாக இடம் பிடித்துவிடுகிறது ‘பல்லபுருசு’ திரைப்படம்.
பேசக்கூட ஆட்கள் இன்றி வளர்ப்பு ஆடுகளோடு பேசி தனித்து வாழும் 70 வயது முதியவர் ஷம்பு, அதே ஊரில் அவரை மதிக்காத மகன் குடும்பம், எப்போதும் அலைபேசியிலேயே தலைதாழ்த்தி இருக்கும் ஷம்புவின் நண்பர்கள், ஓர் எளிய காதல் ஜோடி மற்றும் அச்சு அசலான ஒரு கிராமம் என இவையே கதை மாந்தர்கள். அவர்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களுக்கும் நகைச்சுவைக்கும் மத்தியில் ஒரு சிறு காதல் கதையையும் இணைத்தே கதை பின்னப்பட்டிருக்கிறது.
மேற்பரப்பில் நகைச்சுவையை பிரதானமாக வைத்து அடியில் குடும்ப அமைப்பில் முதியவர்களின் தனிமை, நிராகரிப்பால் வரும் கையறுநிலை, சராசரி பேச்சுத்துணை மற்றும் அன்புக்கு ஏங்குதல் என பல கனமான விஷயங்களை இப்படம் நேர்த்தியாக கையாண்டிருக்கிறது.
தன் விவசாய மண்ணில் தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்ளும்போது ஷம்பு ஒரு சிறுவனிடம் பேசும் நெகிழ்வான உரையாடல் ஒருபுறம். அலெக்ஸா எனும் மெய்நிகர் இயந்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அரசுப் பணிக்கு தயாராவது போல் நடிக்கும் பெண்ணின் பொய்கள் என நகைச்சுவை காட்சிகள் இன்னொரு புறம் சமன் செய்யப்பட்டிருப்பது அழகு.
பராசக்தி காலம் தொட்டே பல விசித்திரமான வழக்குகளை சந்திக்கும் இந்திய சினிமா வழக்காடுமன்றம் இக்கதையில் ஒரு நவீன வழக்கை எதிர்கொள்கிறது. ஒரு வழக்கில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களும் கூட போகிற போக்கில் பார்வையாளர்களுக்கு புரிய வைக்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் பாராட்டுதலுக்குரிய ஒரு புதிய இளைஞர் - உதய் சவுகான். தகவல் தொடர்பியலில் பட்டம் பெற்று மும்பையிலும் சில தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பார்த்தவருக்கு இது முதல் படம் என்பது ஆச்சரியம். முக்கியமாக, இப்படத்தை நம்பி, முதலீடு செய்து தயாரிக்க முன்வந்த நடிகர் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கும் பெரும் பங்குண்டு.
தனிமை, அறியாமை, சோகம், நகைச்சுவை என ஷம்பு தாத்தாவாக வரும் நடிகர் சுதாகர் ரெட்டி பிரமாதப்படுத்தி இருக்கிறார். கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவும் இசையும் பாடல்களும் துணை புரிந்திருக்கின்றன.
நவீன யுகத்தில் புறச்சிக்கல்களை விட நாம் அதிகம் எதிர்நோக்கியிருக்கும் கொடிய உளவியல் அகச்சிக்கல் - தனிமை. இது, எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இப்படியான ஓர் உலகளாவிய சிக்கலை உள்ளூர் கதையாக திரைப்படத்தில், அதுவும் நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது.