முத்து என்கிற காட்டான்: மனிதம் பேசும் மர்மத் தொடர் எப்படி? | ஓடிடி திரை அலசல்

முத்து என்கிற காட்டான்: மனிதம் பேசும் மர்மத் தொடர் எப்படி? | ஓடிடி திரை அலசல்
Updated on
2 min read

தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணியில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'.

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ போன்ற முக்கிய படைப்புகளை தந்து ரசிக்க வைத்த இந்த கூட்டணி, முதன்முறையாக ஓடிடி களத்தில் இறங்கியிருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

10 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டெடுக்கும் புள்ளியில் தொடங்கி, அவனது மர்மமான வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கிறது.

தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள காவல் நிலையம், வழக்குகள் ஏதுமின்றி மூடப்படும் நிலையில் இருக்கிறது. அப்போது ஊரின் ஒதுக்குப்புறத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு தலை கண்டெடுக்கப்படுகிறது. கூடவே, ஒரு பையில் கட்டுக் கட்டாக பணம், ஒரு கடிதமும் கிடைக்கிறது. அந்தத் தலைக்குச் சொந்தக்காரர் முத்து (விஜய் சேதுபதி) என்பது தெரியவருகிறது. 

ஹெட் கான்ஸ்டபிள் காளை பாண்டியன் (வடிவேல் முருகன்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன் தலைமையிலான குழு, முத்துவின் பின்னணியை விசாரிக்கத் தொடங்குகிறது.

இந்தத் தேடலில் முத்துவின் வாழ்க்கை ஒரு ரோலர்-கோஸ்டர் பயணம் போல தமிழகம் தாண்டி கேரளம் வரை விரிகிறது. அவர் ஒரு டான்ஸ் குழுவில் டிரைவர், கடிகாரம் பழுதுபார்ப்பவர்ம், யானைப் பாகன், ஆட்டுப்புழுக்கை விற்பவர் எனப் பல முகம் கொண்டவராக பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறார்.

உண்மையில் யார் இந்த முத்து என்கிற காட்டான்? அவர் ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த வெப் தொடர்.

இயக்குநர் மணிகண்டன் தன் வழக்கமான ஸ்லோ பர்னர் பாணியை இதிலும் கையில் எடுத்துள்ளார். ஆனாலும் எந்த இடத்திலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.

கான்ஸ்டபிள் காளையாக வரும் வடிவேல் முருகனின் வாழ்க்கையிலிருந்து தொடங்கும் கதை, அடுத்தடுத்து பல அடுக்குகளாக விரிந்து நம்மை உள்ளே இழுத்து விடுகிறது.

முத்துவின் வாழ்க்கையை அவசரமின்றி, ஒவ்வொரு பக்கமாக பிரித்துக் காட்டுவதில் திரைக்கதையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதல் ஐந்து எபிசோடுகள் முத்து யார் என்கிற மர்மத்தைத் தக்கவைப்பதில் செவ்வனே செயல்படுகின்றன. 

இருப்பினும், பிந்தைய எபிசோடுகளில் திரைக்கதை சற்றே தடம் மாறி, கேங்ஸ்டர் பாணிக்குள் நுழைவது பார்க்கும் நம்மை சடாரென வேறொரு மனநிலைக்கு கொண்டு சென்றுவிடுவது நெருடல்.

குறிப்பாக, கேரளாவில் நடக்கும் விசாரணை பகுதிகள் ஒரு புலனாய்வு தொடரைப் போல அல்லாமல், முத்துவை பற்றிய ஒரு ஆவணப்படத்தை நேர்காணல் செய்வது போலவே நீள்கின்றன. காவல் துறையினர் உண்மையான விசாரணை நடத்துவதை விட, முத்துவுடன் பழகியவர்களிடம் பேசுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவது திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கிறது.

விஜய் சேதுபதி் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இன்றி, மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒருபுறம் காட்டான் என்று அழைக்கப்பட்டாலும், மறுபுறம் அவர் காட்டும் எல்லையற்ற மனிதாபிமானம் நெகிழ வைக்கிறது. அதற்காக தொடர் முழுக்க ஏராளமான உணர்வுபூர்வமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் முதியவரை அதே ஹோட்டலுக்கு முதலாளியாக்கும் காட்சியை சொல்லலாம். தொடர் முழுக்கவே அவரது அட்டகாசமான நடிப்பு கதையின் கனத்தைத் தாங்கி நிற்கிறது.

வடிவேல் முருகனுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம். சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இதில் நகைச்சுவையுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

ஆனால், வடிவேல் முருகனின் குடும்பம் தொடர்பாக வரும் காட்சிகள், எபிசோடுகளை நகர்த்த மட்டுமே உதவி இருக்கிறதே தவிர, அவற்றால் திரைக்கதைக்கு எந்தப் பயனும் இல்லை. அவரது மனைவியாக வரும் விஜே பார்வதிக்கும் அவரது மாமியாருக்கும் இடையிலான சில காட்சிகள் மட்டும் ஈர்க்கின்றன.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் கிராமத்து சேட்டைக்கார பெருசுகளை கண்முன் நிறுத்துகிறார். அவர் பேசும் சில வசனங்கள் குபீர் ரகம். இவர்கள் தவிர மிலிந்த் சோமன், முத்துகுமார், சிங்கம் புலி, சுதேவ் நாயர், அயலி அபி நக்சத்ரா, ரிஷா ஜாகோப் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, இந்தத் தொடரின் ஒளிப்பதிவு கிராமப்புற எழிலை மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. பின்னணி இசை குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கதையின் தீவிரத்தை உணர உதவுகிறது.

எடிட்டிங் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 10 எபிசோடுகளாக நீண்டிருக்கும் இந்தக் கதையை 8 எபிசோடுகளுக்குள் சுருக்கியிருந்தால் அதன் தாக்கம் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். வெறும் 26 நிமிடத்துக்கு ஒரு எபிசோட் ஓடுகிறது. கெட்டவார்த்தைகள் தேவையின்றி திணிக்கப்பட்டதாக தோன்றுகின்றன.

‘முத்து என்கிற காட்டான்’ சீரியசான காட்சிகள் கொண்ட வழக்கமான க்ரைம் த்ரில்லர் அல்ல. ஒவ்வொரு எபிசோடிலும் முத்துவின் வாழ்க்கையை ஆடியன்ஸுக்கு புரிய வைத்து, நெகிழ்வான தருணங்கள் கொண்ட ஒரு ஸ்லோ பர்னர் முயற்சி.

மணிகண்டனின் முந்தைய படங்களின் தரத்தோடு ஒப்பிடும்போது சில சறுக்கல்கள் இருந்தாலும், இந்தத் தொடரை தாராளமாகப் பார்க்கலாம். மணிகண்டனின் முந்தைய படங்களின் ரசிகர்களுக்கு இது ஒரு திருப்திகரமான அனுபவமாக அமையும். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

முத்து என்கிற காட்டான்: மனிதம் பேசும் மர்மத் தொடர் எப்படி? | ஓடிடி திரை அலசல்
Bad Girl: நாம் ‘ரம்யா’க்கள் மீது கல் வீசியே ஆக வேண்டுமா? | திரை தேவதைகள் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in