

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கோர்ரா’ தொடரின் இரண்டாம் சீசன், முதல் சீசனைப் போலவே சமூக அவலங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஓர் அழுத்தமான புலனாய்வு தொடராக உருவாகியுள்ளது.
முதல் சீசன் சமூக அடுக்கு மற்றும் போதைப்பொருள் பின்னணியில் ஒரு கொலையை அலசியது. இரண்டாம் சீசன் ஒரு கொலை வழக்கு விசாரணையின் வாயிலாக மனித உணர்வுகளை ஆழமாக பேசுகிறது.
பஞ்சாபின் தலேர்புரா கிராமத்தில், ப்ரீத் பஜ்வா என்ற பெண் தனது சகோதரரின் வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். இந்தக் கொலையை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரி தன்வந்த் கவுர் (மோனா சிங்). அவருக்கு உதவியாக, முதல் சீசனில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் அமர்பால் கருண்டி (பரண் சோப்டி) வருகிறார். இந்த இருவரும் சேர்ந்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதே கதை.
முந்தைய சீசனைப் போலவே ஒரு கொலையுடன் தொடங்கும் தொடரில், விசாரணை நிதானமாக முன்னோக்கி நகரத் தொடங்கும்போது, அது வெறும் ஒரு கொலையாக அல்லாமல், குடும்ப பிரச்சினை, ஆணாதிக்க் கட்டமைப்பு மற்றும் நிலத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்கள் எனப் பல விஷயங்களை பேசுகிறது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வரும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தப்படுவதன் பின்னணியை இந்தத் தொடர் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
முதல் சீசனில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுவிந்தர் விக்கி அட்டகாசமான நடிப்பை கொடுத்திருந்தார். அதற்கு சற்றும் குறையில்லாதது இந்தச் சீசனில் மோனா சிங்கின் நடிப்பு. ஒருபக்கம் மகனின் இறப்பு, இன்னொரு பக்கம் குடிபோதைக்கு அடிமையான கணவன் என எப்போதும் கண்களின் வெறுமையை சுமந்து திரியும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக மோனா சிங்கின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.
முதல் சீசனுக்கும் இந்த சீசனுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, கருண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரண் சோப்டியும் அவரது குடும்பமும் மட்டுமே. தனது யதார்த்தமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். தன் அண்ணியின் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்காமல் குற்ற உணர்ச்சியுடன் அவர் காட்டும் மேனரிசங்கள், அதே சமயம் போலீஸ் அதிகாரியாக காட்டும் துடிப்பு என நடிப்பில் வெரைட்டி காட்டி ரசிக்க வைக்கிறார்.
முதல் சீசனை விட இரண்டாம் சீசன் சற்றே மெதுவான திரைக்கதை தான். கொலை தொடர்பான விசாரணை ஒரு கட்டத்துக்கு மேல வேறு பாதையில் பயணிப்பது சில இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. சிலசமயம் அந்தக் கொலை சம்பவமே மறந்து போய்விடும் அளவுக்கு கதை எங்கோ சென்றுவிடுவது போன்ற உணர்வு தோன்றுகிறது. இறுதியில் அத்தனை முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது இந்த தொய்வுகள் ஈடுசெய்யப்படுகின்றன.
ஆனால், முந்தைய சீசனை விட கதாபாத்திரங்களின் பின்னணிக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் அதிக முக்கியத்துவம் இந்த சீசனில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மோனா சிங், அவரது கணவர் இடையிலான காட்சிகள், அதேபோல கருண்டி, அவரது மனைவி,அண்ணன் குடும்பம் இடையிலான காட்சிகள் என ஒரு க்ரைம் த்ரில்லரில் மனித உளவியலை இவ்வளவு உணர்வுபூர்வமான அணுகமுடியுமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார் இயக்குநர்.
த்ரில்லர் விரும்பிகள் மட்டுமின்றி உணர்வுபூர்வ படைப்புகளை விரும்புவர்களும் கூட தாராளமாக பார்க்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தொடர் என்பதை கவனத்தில் கொள்ளவும்