

லோகேஷ் அஜல்ஸ் எழுதி இயக்கி, இந்த ஆண்டு வெளியான க்ரைம் திரில்லர் படம்தான் ‘லெவன்’ (Eleven). நவீன் சந்திரா, ரேயா ஹரி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சென்னையின் முக்கியப் பகுதிகளில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது. இந்த வழக்கை ஏசிபி ரஞ்சித் விசாரிக்கிறார். அவர் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதன் காரணமாக வழக்கு விசாரணை ஏசிபி அரவிந்திடம் (நவீன் சந்திரா) கைமாறுகிறது.
ஒரு கொலை, மற்றொரு கொலையுடன் உள்ள தொடர்பை அறிந்து, இது ஒரு சீரியல் கில்லர் செய்யும் தொடர் கொலைகள் என்பதை அரவிந்த் கண்டறிகிறார். இருப்பினும் அவருக்கு எவ்விதமான தடயங்களும் கிடைக்கவில்லை. பிச்சைக்காரர் ஒருவர் கூறும் தகவல் மூலம் அரவிந்துக்கு ஒரு முன்னெடுப்பு கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து தாரா என்ற பெண்ணின் தங்கை மீரா சீரியல் கில்லரால் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதையும் அரவிந்த் அறிகிறார்.
இதுவரை கொலை செய்யப்பட்ட ஆறு நபர்களும் இரட்டையர்கள் என்பது தெரிய வர, அதன் பின் உள்ள மர்ம முடிச்சிகளும், அவற்றை அவிழ்ப்பதற்கான முன்னெடுப்புகளும்தான் திரைக்கதை.
க்ரைம் திரில்லர் ஜானரில் அமைந்துள்ள இந்தத் திரைப்படத்தில் திருப்பங்களுக்கு பஞ்சமில்லை. நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும். ஆனால் திரையில் நடப்பது வேறொன்றாக இருக்கும். அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜல்ஸின் அற்புதமான ஏழுத்துக்கும், அவர் அதை திரையில் வழங்கிய விதத்துக்கும் வெகுவாக பாராட்டலாம்.
நடிகர்களை பொறுத்தவரை நவீன் சந்திரா தனக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரத்துக்கு தனது நிறைவான நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்துள்ளார். இதர நடிகர், நடிகைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கார்த்திக் கண்ணனின் கேமரா திரில்லிங் காட்சிகளை படம் பிடிக்க தவறவில்லை. எடிட்டர் என்.பி. ஸ்ரீகாந்தின் வெட்டுகள் இன்னும் துல்லியமாக இருந்திருந்தால் படத்தின் போக்கை மேலும் மெருகெற்றியிருக்கும்.
க்ரைம் திரில்லர் விரும்பிகளுக்காகவே எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.