OTT Pick: Alappuzha Gymkhana - ஸ்போர்ட்ஸ் ஜானரில் ஒரு ஜாலி அனுபவம்!

OTT Pick: Alappuzha Gymkhana - ஸ்போர்ட்ஸ் ஜானரில் ஒரு ஜாலி அனுபவம்!
Updated on
1 min read

காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம் 'ஆலப்புழா ஜிம்கானா' (Alappuzha Gymkhana). நாஸ்லென், அனகா ரவி உள்ளிட்ட பலர் நடித்து நடப்பு ஆண்டில் வெளியான இப்படம், ஸ்போர்ட்ஸ் ஜானரில் நகைச்சுவை நிறைந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது.

ஜோஜோ (நாஸ்லென்), ஜான், அகமது, செருத் மற்றும் ஷானவாஸ் ஆகிய ஐவரும் நண்பர்கள். ஆலப்புழாவை சேர்ந்த இவர்கள் ஐவரும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடிக்கின்றனர். ஷானவாஸ் மட்டும் தேர்ச்சி பெற, மற்றவர்கள் தோல்வியடைகிறார்கள். இதனால் அவர்கள் கல்லூரியில் எப்படி சேருவது என்பதற்கான வழிகளைத் தேடுகின்றனர்.

குத்துச்சண்டை விளையாட்டில் சேருவதன் மூலம் விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேருவதற்கான ஒரு சாத்தியமான வழி இருப்பதை ஜோஜோ கண்டறிய, தங்கள் குழுவை குத்துச்சண்டையில் பங்கேற்க அவர் வலியுறுத்துகிறார். அவர்கள் ஐவரும் உள்ளூர் குத்துச்சண்டை கிளப்பான ‘ஆலப்புழா ஜிம்கானா’வில் பயிற்சியாளர் சலீமின் கீழ் சேருகின்றனர். ஆர்வமின்மையின் காரணமாக ஷானாவஸ் வெளியேற, ஜான் மல்யுத்தத்துக்கு மாறுகிறார்.

ஜோஜோ, வலுத் மற்றும் செருத் ஆகியோர் சலீமின் முன்னாள் மாணவரும், மாநில அளவிலான குத்துச்சண்டை வீரருமான ஆண்டனியின் கீழ் கடுமையான பயிற்சி பெறுகின்றனர். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கு பெற, மாவட்ட அளவிலான போட்டியில் மூவரும் பங்குபெற்று வெற்றி பெறுகின்றனர். இவர்களுடன் சுயமாக குத்துச்சண்டை கற்றுக்கொண்ட தீபக், முந்தைய ஆண்டு மாநில போட்டியில் பங்கேற்று தோற்ற கிரண் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு ஓர் அணியாக தகுதி பெறுகின்றனர்.

மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்ற ஆலப்புழா ஜிம்கானா அணி சாம்பியன்ஷிப்பை வென்றார்களா, இல்லையா என்பதை நோக்கியே இப்படத்தின் திரைக்கதை நகர்கிறது.

பெரும்பாலும் பிரபலமடையாத நடிகர்களை வைத்து இப்படத்தை சிறப்பாக வழங்கிய இயக்குநர் காலித் ரஹ்மானுக்குப் பாராட்டுகள். குத்துச்சண்டையை மையமாக வைத்து நகரும் திரைக்கதையில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு ஜானரில் உள்ள படங்கள் பெரும்பாலும் சீரியஸாக இருக்கும் என்ற மரபை, நகைச்சுவையை அதிகம் வழங்கியதன் மூலம் உடைத்திருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நிறைவான நடிப்பின் மூலம் தங்களது கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்த்திருக்கின்றனர். சண்டை மற்றும் விளையாட்டுக் காட்சிகளை படமாக்கிய விதம் நம்மை கவர்கிறது. குறிப்பாக, அனகா ரவியின் சண்டையை காட்சிப்படுத்திய விதமும், க்ளைமேக்ஸில் வரும் தெருச்சண்டையை காட்சிப்படுத்திய விதமும் மிகச் சிறப்பு. விஷ்ணு விஜயின் இசை குறிப்பிடத்தக்க தாக்கத்தை திரையில் ஏற்படுத்துகிறது.

நகைச்சுவை படத்தை விரும்பி பார்க்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், இப்படம் நிச்சியம் உங்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தைத் தரும். இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in