

ஊரையே அச்சுறுத்தும் இரண்டு ரவுடிகள், அவர்களை என்கவுன்ட்டரில் கொல்ல துடியாய் துடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி, இந்த இருவருக்கும் இடையே மாட்டிக் கொள்ளும் ஒரு முன்னாள் அடியாள். இவர்களுக்கு இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம். இதுதான் ‘வீர தீர சூரன்’ படத்தின் ஒன்லைன். இதனை விறுவிறு த்ரில்லராகவும், சுவராஸ்ய காட்சிகளுடனும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்ப படம் தொடங்கியது முதல் காட்சிகளின் பரபர நகர்வு ஆரம்பித்து விடுகிறது. பெண் ஒருவர் ரவுடியான சுராஜ் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்யும்போது தொடங்கும் பதைபதைப்பு படத்தின் இடைவேளை வரை அதே டெம்போவில் எங்கும் குறையாமல் பார்த்துக் கொண்டது இயக்குநரின் திரைக்கதை சாதுர்யம்.
கண்மூடித்தனமான ஆக்ஷன் காட்சிகளை அள்ளி தெளிக்காமல் வெறும் வசனங்கள் மூலமாகவே ஆடியன்ஸை சீட் நுனிக்கு கொண்டு வரும் உத்தியை இந்த படத்தில் இயக்குநர் அதிகம் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. இடைவேளைக்கு முன்பாக எஸ்.ஜே.சூர்யாவும் விக்ரமும் பேசிக் கொள்ளும் காட்சி, இரண்டாம் பாதியில் சுராஜ் - விக்ரம் பேசிக் கொள்ளும் காட்சி என பல புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட தருணங்கள் இதற்கு உதாரணம்.
இடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ்பேக்கில் வைக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் காட்சி, ஒரு மாஸ் காட்சிக்கான உதாரணம். விக்ரமுக்கு நிச்சயமாக இது ஒரு ‘கம்பேக்’ என்று சொல்லலாம். படம் முழுக்க மிகவும் சிம்பிளாக வருகிறார். மாஸ் காட்சிகளை மிக அநாயசமாக கையாள்கிறார்.
படம் முழுக்க தனது இருப்பை மிக அழுத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் பதிவு செய்து ஈர்க்கிறார். எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல நடிப்பில் பின்னியிருக்கிறார். சின்ன சின்ன மேனரிசங்களில் கூட நுணுக்கம் காட்டி அப்ளாஸ் அள்ளுகிறார்.
க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் ஒரு காட்சியில் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் மூன்றிலும் விஸ்வரூபம் எடுத்து ஆடியிருக்கின்றனர். ஒரு தரமான ஆக்ஷன் த்ரில்லரை விரும்புவோர் தாராளமாக கண்டு ரசிக்கலாம் இந்த ‘வீர தீர சூரனை’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.