

உலகிலேயே தங்கம் அதிகமாக நுகர்வு செய்யும் நாடு இந்தியா. தனிநபர் வருவாய் உள்ளிட்ட வளர்ச்சி காரணிகளை அதிகம் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களில் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில்தான தனிநபர் தங்க நுகர்வு அதிகம் செய்யப்படுகிறது. 2024 உலக தங்க கவுன்சில் அறிக்கைப்படி ஆண்டுக்கு 200-லிருந்து 225 டன் வரையிலான தங்கம் அம்மாநிலத்தில் நுகர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. யதார்த்த சினிமாக்களை எடுப்பதில் வல்லவர்களான சேட்டன்களுக்கு, இப்படியொரு கதைக்கரு கிடைத்தால் விட்டுவைப்பார்களா? இந்த தங்கத்தையும், அது சாமான்யர்களின் வாழ்வில் நடத்தும் வதைகளை மையப்படுத்தி மலையாளத்தில் வந்திருக்கும் திரைப்படங்களில் ‘தொண்டிமுதலும் திரிக்ஷாக்ஷியும்’ (Thondimuthalum Driksakshiyum), ‘ஒருத்தி’ (Oruthee)’, தற்போது வந்திருக்கும் ‘பொன்மேன்’ (Ponman) ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
இந்தப் படங்கள் வெறுமனே திரைப்படங்களாக மட்டுமின்றி, சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் தங்க நகை உருவாக்கும் நம்பிக்கை குறித்து பேசியிருக்கும். அதேநேரம், தங்க நகையால் ஒரு குடும்பத்தில் குறிப்பாக கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளையும், குடும்பங்களில் தங்க நகைகளுக்கான முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கியிருக்கும். இந்த மூன்று படங்களிலுமே தங்க நகையை இழப்பவர்கள் அனுபவிக்கும் பரிதவிப்புகளை பார்வையாளர்களுக்கு உறுத்தலின்றி கடத்தியிருக்கும். இந்த 3 படங்களுமே கட்டாயம் பார்க்க வேண்டிய மலையாளத் திரைப்படங்கள் வரிசையில் இடம்பிடித்திருப்பவை.
‘Thondimuthalum Driksakshiyum’ - சாதி மறுப்புத் திருமணம் செய்த பிரசாத் - ஸ்ரீஜா தம்பதி பேருந்தில் பயணிக்கும்போது,ஸ்ரீஜா அணிந்திருந்த செயினை திருடன் ஒருவன் திருடி விழுங்குவதைப் பார்த்துவிடுகிறாள். அதன்பிறகு, அந்த திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அதன்பிறகு அந்த செயின் அந்த தம்பதிக்கு கிடைக்கிறதா, இல்லையா என்பதுதான் படத்தின். சஜீவ் பழூர் எழுதிய இந்த கதையை இயக்குநர் திலீஷ் போத்தன் இயக்கியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.
தங்கள் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டி, புகையிலை சாகுபடி செய்வதற்கு அந்த செயினை விற்று வாழ்க்கையில் முன்னேற காத்திருக்கும் சமயத்தில், அந்த செயின் பறிபோய்விடும். இத்தகைய சூழலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதிக்குள் நடக்கும் காத்திரமான வாழ்வியலை இந்தப் படம் பேசியிருக்கும். அதேபோல தங்க நகையை தொலைத்துவிட்டு காவல் நிலையம் சென்றால், அந்த நகையை மீட்பதற்கான நடைமுறைகள் எப்படியிருக்கும்? புகார்தாரர் செய்ய வேண்டிய செலவுகள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் இந்தப் படத்தில் சமரசமற்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
சுரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன், ஃபஹத் பாசில் மூவரும்தான் இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள். ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.
‘Oruthee’ - கொச்சியில் அரசு படகில் நடத்துனராக பணியாற்றுபவர் ராதாமணி. கிராஃபிக் டிசைனரான இவரது கணவர் வெளிநாட்டில் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு தனது படிப்புக்கான சரியான வேலையைத் தேடிக் கொண்டிருப்பார். தனது மாமனார், மாமியார் மற்றும் இரு மகள்களை கவனித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை சுமந்துகொண்டிருப்பார். கணவரின் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தவுடன் தனது கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் ராதாமணியின் அன்றாட வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்.
ஒருநாள் ராதாமணியின் குழந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். மருத்துவச் செலவுக்கு தனது மகளுக்காக வாங்கி வைத்திருக்கும் நெக்லெஸ் ஒன்றை அடகு வைத்து பணம் பெற முயற்சிப்பார். ஆனால், அதுவரை தங்களிடம் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தங்கத்தின் எடைக்கும், அடகு கடையில் சொல்லும் அளவுக்கும் வித்தியாசம் இருப்பது ராதாமணிக்கு தெரியவரும். இது தொடர்பாக காவல் துறையில் ராதாமணி புகார் அளிக்க, அந்த காவல் நிலையத்தின் நேர்மையான முரட்டுத்தனமான எஸ்.ஐ. ஆன்டனி என்ன நடவடிக்கை எடுத்தார்? அந்த தங்க நகை ராதாமணிக்கு கிடைத்ததா? இல்லையா என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.
இயக்குநர் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணின் வாழ்வாதார போராட்டம் அத்தனை யதார்த்தமான காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நகைக்கடைகளில் நம்பி வாங்கு தங்கநகை, அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் பிரச்சினைகளை, குறிப்பாக, வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கும், நாள்தோறும் சொந்த ஊரில் கஷ்டப்படும் மனைவிக்கும் இடையே தொலைபேசி வழியாக நடக்கும் சண்டையை நம் செவிக்குள் கடத்தியிருப்பார்.
ஒருபக்கம் சந்தேகப்படும் கணவன், மறுபக்கம் சமூகத்தில் பணபலம் படைத்த நகைக்கடை முதலாளியை ஒரு சாமான்ய பெண் எப்படி போராடி வெல்கிறார் என்பதை ரசிக்கும்படியாக எடுத்திருப்பார். ராதாமணியாக நவ்யா நாயர் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.
2000-களின் தொடக்கத்தில் தோராயமாக 3520 ரூபாயாக இருந்த தங்கம், தற்போது 66,000-ஐ கடப்பதும், குறைவதுமாய் இருந்து வருகிறது. இல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாததாய் மாறிவிட்ட ஆபரணத்தங்கத்தை மையப்படுத்திய கதைக்களம் மீதான மாலிவுட் இயக்குநர்களின் தீரா தேடல் மேலும் தொடர வேண்டும் என்பதே திரை ரசிகர்களின் பேராவல்!