

ஒரு வாழ்வியலை அதன் அகம், புறம் சார்ந்த மனநிலையில் அதற்கே உண்டான நிலவியல் அழகுடன் இயல்புக்கு நெருக்குமாக காட்சிப்படுத்தும் படைப்புகள் உலக சினிமா வரையறைக்குள் தாமாக வந்து விழுகின்றன. அவை உலகத்தின் ஆகச் சிறந்த சினிமாக்களாக புகழப்படுகின்றன. இப்படியான ‘கலைப் படைப்புகள்’ தமிழ் சினிமாவில் சற்று அரிதுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அரிய வகை படைப்பாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘கூழாங்கல்’. பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் 94-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. உலக அளவில் பல்வேறு விருதுகளை குவித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.
தகிக்கும் வெயில் படர்ந்த பாதையில் வெற்றுக் காலுடன் வெறுப்பைச் சுமந்தபடி நடந்து செல்கிறார் கணபதி (கறுத்தடையான்). பீடியும், குடியும் அவரின் ஆகச் சிறந்த வஸ்து. தன்னோடு சண்டையிட்டு பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர அவரது கிராமத்துக்கே செல்வதற்கான நடை அது. இடையில் தனது மகன் வேலுவின் (செல்லப்பாண்டி) பள்ளிக்கூடத்துக்குச் சென்று பாதி வகுப்பிலிருந்து அவரையும் கூட்டிச் செல்கிறார். இருவரும் செல்லும் அந்தப் பயணத்தினூடே நிகழும் சம்பவங்களும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும்தான் இந்த சூடான ‘கூழாங்கல்’.
மிகவும் எளிதான கதை. ஒரு வாழ்வியலுக்குள் நம்மை புகுத்தி அதுனுடன் பயணிக்க வைத்து இறுதியில் ஆசுவாசப்படுத்தி அனுப்பும் திரையனுபவமும், உலகத் தரம் வாய்ந்த ஒளிப்பதிவும்தான் படத்தை உலக சினிமாவாக்கியிருக்கிறது. அங்கே கணபதி, வேலுவைத் தாண்டி இன்னொரு கதாபாத்திரமாகவே படம் முழுக்க பயணிக்கிறது. அதுதான் நிலம். புழுதி பறக்கும் பொட்டல் காட்டின் வெம்மையில் கட் செய்யப்படாத வைடு ஆங்கிள் ஷாட்டில், நடந்து செல்லும் கதைமாந்தர்களுடன் நம்மையும் அழைத்துச் சென்று மூச்சிரைக்க வைக்கிறது விக்னேஷ் குமுலை மற்றும் ஜெயா பார்த்திபனின் ஒளிப்பதிவு.
அசைந்துகொண்டே பின்தொடரும் கேமராவின் பெயின்டிங் போன்ற ஷாட்ஸ், உணர்வை பதிவு செய்யும் ஸ்டாட்டிக் ஷாட்ஸ், சிங்கிள் ஷாட்ஸ், எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட், க்ளோஸப் என காட்சிகளில் கதை சொல்லியிருப்பது ரசனை. தேவையான உணர்வுகளை கடத்திய பின்னான கணேஷ் சிவாவின் ‘கட்ஸ்’ நிதானம் சேர்க்கிறது. ஹரிபிரசாத்தின் சவுண்ட் டிசைன், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கச்சிதமான யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, தரிசு நிலத்தின் இளைப்பாறல்.
பொட்டல் வெளியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு முதுகு காட்டி விறுவிறுவென நடந்து செல்லும் கறுத்தடையான் நடிப்பில் அப்படியொரு யதார்த்தம். சலிக்காத அவரின் நடை ஈர்ப்பு. ஆணாதிக்க வெறி ஊறிய, முரட்டுத்தனமான குடிகார கிராமத்து மனிதராக கதாபாத்திரத்தை உள்வாங்கி வாழ்த்திருக்கிறார். அடிப்படையில் கறுத்தடையான் ஒரு கவிஞர். தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி வரவேற்க்கத்தக்கது. எல்லாவற்றுக்கும் முகபாவனைகளால் மட்டுமே பதில் சொல்லும் அப்பாவியான மகனாக செல்லப்பாண்டி கூழாங்கல்லை வாயில் போட்டு நடக்கும்போதும், அப்பாவின் அடிவாங்கும்போதும் பாவமாய் காட்சியளிக்கிறார். இவர்களைத் தவிர மிக சொற்பமான கதாபாத்திரங்களால் படத்தை அழகாக்கியிருக்கிறார் வினோத்குமார்.
காட்சிகளின் வழியே கதை சொல்லும் படத்தில் வசனங்களுக்கு இடமேயில்லை. உணர்வுகளை மொழியாக்கி வசனங்களாக கடத்தியிருப்பது காட்சி ஊடகமான சினிமாவுக்கு செய்திருக்கும் நியாயம். பெட்டிக்கடை, குடிசை வீடு, பள்ளிக்கூடம், தரிசு நிலம், எலிக்கறியை சுட்டு சாப்பிடும் மக்கள், தண்ணீரில்லா பூமியில் தவழும் கொக்கக்கோலா பாட்டில், இறுதியில் நீரூற்றிலிருந்து சிறிது சிறிதாக நீரெடுத்து குடத்தில் சேகரிப்பது என முழுமையாக காட்சியனுபவ பேக்கேஜ்.
படம் அடிப்படையில் ஆணாதிக்கத்தையும், குடும்ப வன்முறையையும், தந்தை - மகனுக்காக சிக்கலான உறவையும் பேசுகிறது. குழந்தைகளின் மீது வன்முறை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விளக்கும் பேருந்து காட்சியும், தாகம் எடுக்காமலிருக்க கூழாங்கல்லை வாயில் போட்டு இறுதியில் அதை வீட்டில் ஏற்கெனவே சேகரித்து வைத்துள்ள கற்களுடன் ஒன்றாக வைக்கும் இடமும் தினமும் இப்படித்தான் நடக்கிறது என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. கடைசி 7 நிமிடங்கள் சிங்கிள் ஷாட் நிசப்தத்துடன் ‘கூழாங்கல்’லின் கனத்தை உணர்த்திவிட்டு கலைகிறது. பொறுமையாக நகரும் இப்படம் வழக்கமான வெகுஜன சினிமா பார்வையாளர்களுக்கு சோர்வை கொடுப்பது போன்ற உணர்வு எழலாம். அதைக் கடந்தால் ஒரு நிலத்தின் வாழ்வியலை உள்வாங்க முடியும். ட்ரெய்லர் வீடியோ: