

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும், ஓவியர்களும் அழிந்து கொண்டு இருக்கின்றனர். அதன் பின்னணியில் உருவாகும் வெப் தொடர் ‘வர்ண கதைகள்’.
இதில் மாறன், சென்ட்றாயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, ஆர்ஜே புவனேஸ்வரி, நித்யா குயின், ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அஷ்வின்நோயல் ஒளிப்பதிவு செய்யும் இத்தொடரை இமானுவேல் எழுதி இயக்குகிறார். ஜே.கே.தமிழ் மீடியா புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜெயச்சந்திரன் தயாரிக்கிறார்.
இதுபற்றி இமானுவேல் கூறும்போது,“இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும், ஓவியர்களும் அழிந்து கொண்டு இருக்கின்றனர். அந்தக் கலையை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சிதான் இந்த வெப் தொடர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்புக்காக காத்திருக்கும் 4 நண்பர்கள் ஒரு பயணத்தைத் தொடங்குகின்றனர்.
அவர்கள் எதிர்பாராமல் சந்திக்கும் ஒருவரிடம் சிக்கிக்கொள்கின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதை திகிலுடனும், நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி ஹாரருடனும் இதை உருவாக்குகிறோம்” என்றார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது.