

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தேனாம்பேட்டையில் சுமங்கலா ஸ்டீல் நிறுவனம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பொறியியல் கல்வி பயிலும் வகையில் ‘உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்’ திட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ‘இந்து’ என்.ரவி ஆகியோர் கலந்து கொண்டு 70 மாணவர்களுக்கு சுமார் ரூ.2.80 கோடிக்கான ஊக்கத்தொகையினை வழங்கினர்.
இந்த நிகழ்வில் அவர்கள் பேசியதாவது:
சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி: ஒவ்வொரு மாணவருக்கும் நல்ல கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனைத் தங்களது முன்னேற்றத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். மாணவர்களாகிய உங்களுக்கு ஏதாவது கிராமத்துடன் குடும்பத் தொடர்பு இருக்கும். அந்தக் கிராமத்தைக் கண்டறிந்து, அங்குள்ள குறைந்தது இரண்டு குடும்பங்களைச் சந்தித்து, உயர்கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். தாங்கள் எவ்வாறு படித்து உயர்கல்வி நிறுவனத்துக்கு வந்தோம் என்பதை விளக்கி, அவர்களது குழந்தைகளும் உயர்கல்வி பெறுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
‘இந்து’ என்.ரவி: சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது. தங்களது குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே பெற்றோரின் கனவாகும். ஆனால், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவை நனவாவதில்லை. இந்த தடைகள், நிறைவேறாத கனவுகள் ஆகியவற்றில் இருந்து மாணவர்களை விடுவித்து, அவர்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்த சுமங்கலா போன்ற கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் உதவுகின்றன.
மாணவர்கள் பெறும் கல்வியும், வாழ்க்கையில் அடையும் முன்னேற்றமும், இந்தச் சமூகத்தின் பங்களிப்பால் சாத்தியமாகின்றது. எனவே, சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம், சமூகம் உங்களுக்கு வழங்கியவற்றுக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்துகிறீர்கள். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் சுமங்கலா ஸ்டீல் நிறுவனர் ராஜேந்திர சபாநாயகம், சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் அஸ்வின் சபாநாயகம், தலைமை பொது மேலாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.