

பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரை வெளியிட வேண்டாம் என ஜி- 5 ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்தவர் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். கொலை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், இப்போது குஜராத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலை, சல்மான் கான் வீட்டில் சில மாதங்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடத்தியது, சல்மானின் நெருங்கிய நண்பரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், சுட்டுக் கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை கதை இணையத் தொடராக உருவாகி உள்ளது. ‘லாரன்ஸ் ஆஃப் பஞ்சாப்’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ள இத்தொடர் ஜி 5 ஓடிடி தளத்தில் நாளை (ஏப்.27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற குற்றவாளியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தொடர், குற்றச் செயல்களைப் போற்றும் வகையில் இருப்பதாகப் பஞ்சாப் காவல்துறை கவலை தெரிவித்தது.
இந்த இணையத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டுமென பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இத்தொடரின் உள்ளடக்கத்தில் குற்றச்செயல்களைப் பெருமைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் சர்ச்சைக்குரிய தொடரை வெளியிட வேண்டாம் என ஜீ 5 ஓடிடி தளத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், இந்தத் தொடரின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.