

உளவியல் த்ரில்லர் முதல் யதார்த்த படம் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.
என்ன விலை: சஜீவ் பழூர் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘என்ன விலை’. இந்தப் படத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், கமலேஷ் ஜெகன், விஜயலக்ஷ்மி வீரமணி, மோகன் ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் மீனவருக்கு ஒரு தங்கப் பதக்கம் கிடைக்கிறது. அது அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தை படம் பேசுகிறது. செப்டம்பர் 17-ல் திரையரங்குகளில் வெளியான இந்த தமிழ்ப் படம், அக்டோபர் 15 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்: ஷியாமின் கிரீஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’. இந்தப் படத்தில் சங்கீத் பிரதாப், ஷராஃபுதீன், அகிலா பார்கவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூளைசாவு அடைந்து கோமாவில் இருக்கும் இளைஞன் தீடீரென அதிலிருந்து மீண்டெழுகிறான். அவன் தொலை தூரத்தில் கேட்கும் ஒலிகளை உணரும் அபாரமான சக்தியை பெறுகிறான்.
அந்த திறமையால் அவன் வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள் என்ன என்பது படம். செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த மலையாள நகைச்சுவை த்ரில்லர் படம் அக்டோபர் 15 அன்று மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
ஆஷா: சஃபர் சனல் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆஷா’. இந்தப் படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ல் திரையரங்குகளில் வெளியான இந்த உளவியல் த்ரில்லர் பாணியிலான படம் அக்டோபர் 16 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
காப்பி ஸ்குவாட்: பெல்ராஜ் கலாரிக்கல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘காப்பி ஸ்குவாட்’. இதில், ரினோஷ் ஜார்ஜ், ஜோல் லோசப், அனஹா அஜித், தியா தீபன், ராகுல் ராஜி நாயர், அபிராமி தயானந்தன உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட 4 இளைஞர்கள் இணைந்து ஒரு கஃபே தொடங்குகின்றனர். வாழ்க்கையில் தங்களை நிரூபிக்க அவர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்பதே இதன் கதை. இந்த வெப் தொடர் அக்டோபர் 15 அன்று ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காகிதம் படவாலு: எம்.ஜி.ஆர். துக்காராம் இயக்கத்தில் வெளியான படம் ‘காகிதம் படவாலு’. இந்தப் படத்தில், வர்தன் குர்ராலே, கிருஷ்ண பிரியா பிரேம் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்தக் காதல் படம், செப்டம்பர் 18-ல் திரையரங்குகளில் வெளியானது. இந்த தெலுங்கு படம் அக்டோபர் 16 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஒரு அன்வேஷனதின் துடக்கம்: எம்.ஏ. நிஷாத் இயக்கத்தில் வெளியான புலனாய்வு த்ரில்லர் படம் ‘ஒரு அன்வேஷனதின் துடக்கம்’. இதில், சமுத்திரகனி, ஷைன் டாம் சாக்கோ, வாணி விஸ்வநாத், ஸ்வசிகா விஜய், ஜூத் அந்தோணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2024, நவம்பர் 8-ல் திரையரங்குகளில் வெளியான இந்த மலையாளப் படம், அக்டோபர் 16 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆதிநாஷம் வெள்ளபோக்கம்: ஏ.ஜே.வர்கீஸ் இயக்கத்தில் வெளியான ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ‘ஆதிநாஷம் வெள்ளபோக்கம்’. இந்தப் படத்தில், ஷைன் டாம் சாக்கோ, சஞ்ஜய் தாமஸ், வினீத் மோகன், மஞ்சு பிள்ளை, பைஜு சந்தோஷ், அசோகன், பிரேம் குமார், ஜாம் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த மலையாளப் படம் அக்டோபர் 16 அன்று சாய்னா பிளே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தி டிரைட்டர்ஸ்: தெலுங்கில் வெளியாக இருக்கும் ஒரு உளவியல் த்ரில்லர் ரியாலிட்டி ஷோ ‘தி டிரைட்டர்ஸ்’. தேஜா சஜ்ஜா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி பிரைம் வீடியோவில் அக்டோபர் 15 அன்று ஒளிபரப்பாக உள்ளது.