

இந்த வார இறுதியை கழிக்க சினிமா ரசிகர்களுக்கு விருந்து வைக்க கலவையான ஜானரில் படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியல் இது.
இருமுடி: ரவிதேஜா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியான படம் ‘இருமுடி’. இந்தப் படத்தில் ரவிதேஜாவுடன் பேபி நக்ஷத்ரா, பிரியா பவானி சங்கர், சாய் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் தெலுங்கு மற்றும் தமிழில், ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும், வசூல் ரீதியாக சாதனையும் படைத்திருந்த இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
மொத ராத்திரி: ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவான படம் ‘மொத ராத்திரி’. இவர்களுடன் இப்படத்தில் சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரவலான பாராட்டை பெற்ற இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கும்.
அங்கீகாரம்: தென்பாதியான் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், கே.ஜே.ஆர், சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவான தடகள விளையாட்டு பற்றிய இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ராம் அண்ட் லீலா: அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கத்தில் வெளியான படம் ‘ராம் அண்ட் லீலா’. இந்தப் படத்தில் ரியோ மற்றும் வர்த்திகா ஜெயின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அங்கிட் மேனன் இசையில் உருவான இப்படம் செப்டம்பர் 18-ம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
துடக்கம்: ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலின் மகள் விஸ்மயா அறிமுகமான மலையாளப் படம் ‘துடக்கம்’. இந்தப் படத்தில் இவருடன், ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய் குமார், மனோஜ் கே ஜெயன் உள்ளிட்டோருடன், சிறப்பு தோற்றத்தில் மோகன்லாலும் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
இடி மழை காற்று: அம்பிலி ரெங்கன் இயக்கத்தில் 2025 பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம் இடி மழை காற்று. இந்தப் படத்தில் செம்பன் வினோத் ஜோஸ், பிரியம்வதா கிருஷ்ணன், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் சாய்னா ப்ளே ஓடிடி தளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
லஸ்ட் ஸ்டோரீஸ் 3: மிகுந்த வரவேற்பு பெற்ற ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரின் மூன்றாவது பாகம் இது. சித்தார்த், தமன்னா, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில், நான்கு இயக்குநர்கள், நான்கு விதமான கதைகளை இயக்கி இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ ஆந்த்தாலஜி வெப் சிரீஸ் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.