

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார். ‘குடும்பஸ்தன்’ சான்வீ மேக்னா நாயகியாக நடித்துள்ள இதில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை (ஆக.21) ரிலீஸ் ஆகிறது.
இப்படம் பற்றி இளன் கூறும்போது, “முதலில் நானே நடித்து இயக்க வேண்டும் என்றுதான் ‘பியார் பிரேமா காதல்’ படத்தை எழுதினேன். அப்போது என்னை நம்பி படத்தின் பட்ஜெட்டான ரூ.2 கோடியை முதலீடு செய்ய யாரும் இல்லை. அதனால் இயக்குநராக என்னை வளர்த்துக்கொண்டு நடிக்கலாம் என்று நினைத்தேன்.
மூன்று படம் இயக்கிவிட்டு நடிக்கலாம் என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக 2 படங்கள் இயக்கியதுமே மூன்றாவதாக ஹீரோவாகி விட்டேன். ‘பியார் பிரேமா காதல்’ படம் கல்யாணத்தில் முடிந்தது. இது கல்யாணத்துக்குப் பிறகு நடக்கும் கதை.
இந்தப் படத்துக்காக உடல் எடை அதிகரித்தேன். இது நேரடியாக ஓடிடி- யில் வெளியாவதால் திரையரங்கில் வரும் கைதட்டல்கள் கிடைக்காது. ஆனால், எதிர்காலத்தில் ஓடிடி தளங்களைத் தவிர்க்க முடியாது. இனி நடிப்பா, இயக்கமா? என்று கேட்கிறார்கள். வருடம் ஒரு படத்தில் நடிக்கவும் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.