

தமிழ் அசல் இணையத் தொடர்களைப் பொறுத்தவரை, ஒரு எபிசோட் 50 நிமிடங்கள் என கொடுங்கனவாக மிரட்டிய காலம் மலையேறிவிட்டது. ஒரு எபிசோட் 20 நிமிடம் மட்டுமே என்றிருந்து, சமூகத்தில் அன்றாடம் காணும் நிகழ்வுகளே அதில் கதைக் களமாக விரிந்தால் கண்களை விலக்காமல் பார்ப்போம். ஜீ5 தளத்தின் ‘சட்டமும் நீதியும்’ முதல் சீசனில் இந்த மேஜிக்கை திறம்படச் செய்திருந்தனர்.
இத்தொடரின் இரண்டாவது சீசன் வந்தால் அவசியம் பார்க்க வேண்டும் என்று எண்ண வைத்தனர். தற்போது 2-வது சீசனும் வந்துவிட்டது. முதல் சீசனில் நோட்டரி பப்ளிக் வழக்குரைஞராக இருந்த சரவணன், நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தன்னை மாய்த்துக்கொண்ட ஒரு ஏழை கிராமத்து மனிதரின் மரணத்தின் பின்னாலுள்ள மர்மத்தைத் தேடிக் கண்டறிந்து ,அதை நீதியின் கண்களுக்குக் கொண்டு வருவதை மிகச் சுவாரசியமாகச் சித்தரித்திருந்தார் பாலாஜி செல்வராஜ்.
சீசன் 2-ல் சட்டத்தை அமல்படுத்தும் காவல் துறையினரே நீதியின் கடைக்கண் பார்வைக்காக இறைஞ்சி நிற்கும் களத்தை கையிலெடுத்திருக்கிறார். பொதுவாக, காவலர்கள் மீது பார்வையாளர்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டும் என்றால், அவர்களது பணி வாழ்க்கை நேர்மையானதாக இருந்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து இந்த இரண்டாவது சீசனுக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் கனகவேல் (பிரேம்குமார்) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். முன்விரோதம் காரணமாக அவருடன் பணியாற்றிய நான்கு காவலர்கள்தான் கொலைக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார் அவரது மனைவியும் வழக்கறிஞருமான சந்திரா (வரலட்சுமி சரத்குமார்). அந்த நான்கு காவலர்களுக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத நிலையில், அவர்களுக்காக நீதிமன்றத்தில் களமிறங்குகிறார் ஒரு சாமானிய வழக்கறிஞரான சுந்தரமூர்த்தி (சரவணன்). கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் உண்மையில் நிரபராதிகளா? இரு தரப்பு வாதங்களின் முடிவில் நீதி யாருக்குச் சாதகமாகிறது என்பதே தொடரின் இடைநில்லா ஓட்டம்.
பாலாஜி செல்வராஜும் பிரதீப் மரியானும் இணைந்து எழுதிய திரைக்கதை, ஒரு காவல் அதிகாரியின் கொலை வழக்கைப் பல சந்தேகங்களும் முரண்பட்ட ஆதாரங்களும் கொண்ட மர்ம கோர்ட் ரூம் த்ரில்லர் டிராமாவாக மாற்றுவதில் கணிசமான பங்காற்றியிருக்கிறது. உண்மை தன் முகத்தைக் காட்டுவதற்கு வழக்கறிஞர்கள் எவ்வாறெல்லாம் களமாடவேண்டியிருக்கிரது என்பதில் சுவாரசியம் மிகுந்திருக்கிறது.
3-வது எபிசோடிலேயே கதை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்வையாளர்கள் நினைக்கும்போது, புதிய திருப்பம் வெளிப்பட்டு அடுத்த எபிசோடுக்கான ஆவல் அதிகரித்துவிடுகிறது. குறிப்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ள தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் சுந்தரமூர்த்தியின் வாதங்கள் ரசிக்க வைக்கின்றன.
சுந்தரமூர்த்தியாக சரவணன் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் சீசனை விட, இதில் கூடுதல் ஈடுபாட்டுடன் கவர்கிறார். அவரது நடிப்பின் பலம், அவர் காட்டும் அமைதியும் நிதானமும். ஆதாரங்களின் அடிப்படையில் எதிர்த்தரப்பு வாதங்களைத் தகர்க்கும் காட்சிகளிலும், தனது பல தவறான முடிவுகளால் ஏற்படும் சிக்கல்களையும் உணர்ந்து வருந்தி, வழக்கை வேகமெடுக்கச் செய்யும் அவரது இறுதிக்கட்ட வாதத்தின்போது அவரது நடிப்பு மேலும் சிறக்கிறது. குறிப்பாக, அறத்தின் பக்கம் நின்று பெறாத வெற்றி உண்மையான மகிழ்ச்சியைத் தராது என்பதை உணர்த்தும் தருணம் மனதில் ஆழமாய் பதிகிறது.
சந்திராவாக வரும் வரலட்சுமி சரத்குமாரும் துயரத்தையும் கோபத்தையும் மனதின் உள்ளே வைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்படாமல் நீதிக்காகப் போராடும் ஆளுமை மிகுந்த பெண்ணாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சுந்தரமூர்த்திக்கும் சந்திராவுக்கும் இடையிலான நீதிமன்ற மோதல்கள் தொடரின் முக்கியமான பலம். இவர்களோடு பிரேம்குமார், கவிதா பாரதி, ஆறுபாலா, கல்லூரி வினோத் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
திரைக்கதை, நட்சத்திரத் தேர்வு, ஒளிப்பதிவு ஆகிய அம்சங்கள் சிறந்து விளங்குவதைப் போல், இந்தத் தொடரின் உணர்வுகளுக்கும் திருப்பங்களுக்கும் உயிர் கொடுத்திருப்பது விபின் பாஸ்கரின் பின்னணி இசை.
பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்திலேயே நிகழ்வதால் சில இடங்களில் உரையாடல்கள் அதிகமாகின்றன. ஆனாலும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் அந்தச் சிறு தொய்வுகளை மறக்கடிக்கின்றன. இருபது நிமிடங்களுக்குள் முடியும் அத்தியாயங்கள் ஒரே அமர்வில் தொடரைப் பார்க்கும் ஆர்வத்தைத் தக்க வைக்கின்றன.
எதிர்பாராத இறுதித் திருப்பத்துடன் மூன்றாவது சீசனுக்கான எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது ‘சட்டமும் நீதியும் 2’. முதல் சீசனின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கும் இந்தத் தொடர், இன்னும் எத்தனை சீசன்கள் எடுத்தாலும் அத்தனையிலும் அழுத்தமான கதைக் களத்துடன் வருவோம் என்கிற நம்பிக்கையை இந்த டீம் உருவாக்கியிருக்கிறது.