

‘த ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் 4-வது சீசன் உருவாகும் என்று நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
அமேசான் பிரைமில் வெளியான ‘தி ஃபேமிலிமேன் ’ வெப்தொடரை, ராஜ் மற்றும் டீகே இயக்கினர். இதில் மனோஜ் பாஜ்பாய், ஸ்ரீகாந்த் திவாரி என்ற ஸ்பையாக நடித்திருந்தார்.
பிரியாமணி, நீரஜ் மாதவ், சரத் கெல்கர் உட்பட பலர் நடித்த இந்தத் தொடர் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் 2-ம் சீசன் உருவானது. அதில் சமந்தா, ஈழப் போராளியாக நடித்திருந்தார். இந்த தொடரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 3-வது சீசன் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. 7 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடரைப் பார்த்துவிட்டு பார்வையாளர் ஒருவர், “இத்தொடரின் முடிவை அந்தரத்தில் விட்டு விட்டீர்கள். மீதமுள்ள எபிசோட் அடுத்து வருமா?” என்று இயக்குநர்கள் மற்றும் மனோஜ் பாஜ்பாயை டேக் செய்து கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த மனோஜ், “உங்கள் கேள்விக்கான பதில் சீசன் -4-ல் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் இதன் அடுத்த சீசனும் உருவாவது உறுதியாகி இருக்கிறது.