

பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் நிதி சாகர் தயாரித்துள்ள இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மார்ச் 12-ல் வெளியாகிறது.
இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் கூறும்போது, “‘நித்தம் ஒரு வானம்’ படத்துக்குப் பிறகு இது என் 2-வது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம்.
இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். இந்தப் படத்தை 13 மொழிகளில் டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டிலுடனும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும்.
அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார்.
பிரியங்கா மோகன் கூறும்போது, “இதன் படப்பிடிப்பில் அதிகமான கொரிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேன். அதே போல ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை அவர் உருவாக்கி இருக்கிறார்” என்றார்.