

கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சர்தார் 2’ படம் அக்டோபர் 1-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதுகு றித்த தகவலை அமேசான் பிரைம் வீடியோ இந்தியா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘அனைவரது கவனத்துக்கு: ஒரு புதிய மிஷன் தொடங்க உள்ளது. ‘சர்தார் 2’ அக்டோபர் 1-ல் வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘சர்தார் 2’ படம், செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே ‘சர்தார் 2’ கதையும் நகர்கிறது. ‘ரா’ உளவு அமைப்பில் சரியாக செயல்படாததால், விஜய் பிரகாஷ் என்னும் விஜி (கார்த்தி) தனது சகாக்களுடன் (யோகி பாபு, நிழல்கள் ரவி, தேவதர்ஷினி) ஒரு ‘டம்மி’ டீமுக்கு மாற்றப்படுகிறார். இதற்கிடையே, வால்ரஸ் (அச்யுத் குமார்) என்ற பெயரைக் கொண்ட, தலைமறைவாக இருக்கும் ஒரு முன்னாள் ஏஜென்ட்டை ‘ரா’ அமைப்பு தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறது.
தன் பங்குக்கு தனியாக அவரை தேடும் விஜி ஒரு கால்நடை மருத்துவர் (ஆஷிகா ரங்கநாத்) உதவியுடன் ‘டோகு’ என்ற ஆபத்தான உயிரியல் ஆயுதத்தைப் பற்றியும், அதைத் தன்வசப்படுத்தத் துடிக்கும் யோகி (எஸ்.ஜே.சூர்யா) தலைமையிலான 'பிளாக் டாகர்' என்ற கூலிப்படையைப் பற்றியும் தெரிந்துகொள்கிறார்.
இந்த 'டோகு' ஆயுதத்துக்கும், தலைமறைவாக இருக்கும் விஜியின் தந்தையான சர்தாருக்கும் ஒரு நேரடி தொடர்பு இருக்கிறது. அந்த ஆபத்தான ஆயுதம் தவறான நபர்களின் கைகளில் சென்றுவிடும் என்பதை அறிந்து சர்தாரும் மீண்டும் களத்துக்கு வருகிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘சர்தார் 2’ படத்தின் கதை.
ஒரு சராசரி பார்வையாளர் கூட ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் மீறல்கள் படம் முழுக்க நிறைந்துள்ளன. ஒரு ஸ்பை த்ரில்லரில் கதாநாயகன் தோற்றுவிடக் கூடாது என்ற பய உணர்வு பார்ப்பவர்களுக்கு வர வேண்டும். ஆனால் ‘சர்தார் 2’ அதை செய்யவே இல்லை. இதனால் இந்த ஸ்பை த்ரில்லர் சலிப்பூட்டும் த்ரில்லராக மாறியிருக்கிறது.
முதல் பாகம் அளவுக்கு வரவேற்பு பெறத் தவறிய இந்த 2-வது பாகம், அக்டோபர் 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.