

நிவின் பாலி - மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் அக்டோபர் 2-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
ஜியோ ஹாட் ஸ்டார் மலையாளம் தமது சமூக வலை தள பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொழுதுபோக்கு படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ அக்.2-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 4-ல் வெளியிடப்பட்டது.
உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படும் இந்தப் படம், இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
நிவின் பாலி - மமிதா பைஜு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள மலையாளத் திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன், ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்து உள்ளார். கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.