

கவுரி கிஷன், மலையாள நடிகர் ரம்ஜான் முகமது, ஜெயப்பிரகாஷ், ஜெயசுதா, மாயா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ள வெப் தொடர், ‘லவ் ஆல்வேஸ்’. கொரியாவில் வரவேற்பைப் பெற்ற, ‘ஹியர் வி கோ அகைன்’ என்ற வெப்தொடரைத் தழுவி உருவாகியுள்ள இது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. தொடரில் நடித்துள்ளவர்கள் பங்கேற்றனர்.
இதில் பழம்பெரும் நடிகை ஜெயசுதா பேசும்போது, ‘‘காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் வயதை மாற்றும் விசித்திரமான திருப்புமுனையுடன் உருவாகியுள்ள தொடர் இது. காதல்தான் மையம் என்றாலும் புதுமையாக இருக்கும். நான் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் 200 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்திருக்கிறேன். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட பல கதைகளில் அப்போதே நடித்திருக்கிறேன்.
என் பெயரில் கூட தெலுங்கில் படம் வெளியாகி இருக்கிறது. எப்போது நடித்தாலும் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் முதல் படத்தில் நடிப்பது போலதான் இருக்கும். அந்த கேரக்டர், இயக்குநருக்கு எப்படி வேண்டுமோ, அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைக் கொடுப்பதுதான் எங்கள் வேலை.
இத்தனை வருடம் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றால், இயக்குநரின் நடிகையாக இருப்பதால்தான். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமாக நடித்திருக்கிறேன். இந்த வெப் தொடரில் இயக்குநர் எப்படி வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அப்படி நடித்திருக்கிறேன்” என்றார்.