

புதுடெல்லி: ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி, ஐந்து ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.
உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய ஐந்து தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சந்தாதாரர்களை கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தளங்கள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் கண்காணித்து வருகிறது.
ஏற்கனவே 'உல்லு' மற்றும் 'ஆல்ட் பாலாஜி' போன்ற 25 தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தப் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கை டிஜிட்டல் தளங்களில் தரமான மற்றும் ஆரோக்கியமான உள்ளடக்கங்களை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.