

'ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'பகவந்த் கேசரி' திரைப்படம் திடீரென ட்ரெண்ட் ஆகியுள்ளது.
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பல ரசிகர்கள், இது 2023-ல் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் ரீமேக் என டீகோடிங் செய்து வருகின்றனர். இது ஏற்கெனவே தெரிந்த தகவல்தான் என்றாலும் படக்குழு இதனை உறுதியாக அறிவிக்கவில்லை.
'பகவந்த் கேசரி' படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் 'ஜன நாயகன்' ட்ரெய்லரிலும் தென்படுவதால், ரசிகர்கள் இவ்விரு படங்களையும் தீவிரமாக ஒப்பிடத் தொடங்கினர். இதன் விளைவாக, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'பகவந்த் கேசரி' திரைப்படம் திடீரென ட்ரெண்ட் ஆகியுள்ளது. பல ரசிகர்கள் இந்தப் படத்தின் ஒரிஜினல் கதை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதால், அது ப்ரைம் வீடியோவில் அதிகப்படியான பார்வைகளைப் பெற்று டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
’ஜனநாயகன்’ படத்தின் மூலக்கதை ‘பகவந்த் கேசரி’யாக இருப்பினும், இயக்குனர் வினோத் தனது தனித்துவமான திரைக்கதை மூலம் இதனை ஒரு முழுமையான தமிழ் அரசியல் பின்னணியில் மாற்றி அமைத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும்போதுதான், இது தெலுங்கு படத்தின் நேரடி நகலா அல்லது அதை தழுவி மாற்றி அமைக்கப்பட்ட புதிய படைப்பா என்பது முழுமையாகத் தெரியவரும்.