

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.
வெளியான 24 மணி நேரங்களில் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ’பராசக்தி’ ட்ரெய்லர் படைத்துள்ளது. விறுவிறுப்பான ட்ரெய்லர் கட், இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் என நேற்றிலிருந்து இந்த ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. இதுவும் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்துக்கு நிலவும் பெரும் எதிர்பார்ப்பு காரணமாக இந்த ட்ரெய்லர் வைரல் ஆனது. இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வைகள் பெற்றிருந்த நிலையில் தற்போது இதனை ‘பராசக்தி’ ட்ரெய்லர் முறியடித்துள்ளது.