

சென்னை: மம்மூட்டி நடித்துள்ள ‘பிரமயுகம்’ திரைப்படம் வரும் மார்ச் 15-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பிரமயுகம்’ படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார். மம்மூட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சேஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார்.
படம் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் மலையாளத்தில் வெளியானது. கருப்பு - வெள்ளை திரையனுபவத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக பாராட்டப்பட்டு வரும் படம் ரூ.65 கோடி வரை வசூலித்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் படம் வெளியானது. இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 15-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.