

ஜூன் 8-ம் தேதி உலக கடல் தினத்தை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணியை தூய்மைப்படுத்த ஆட்களை திரட்டிக் கொண்டிருக்கிறது சென்னையில் உள்ள சபரி பசுமை அறக்கட்டளை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளில் 30-க்கும்
மேற்பட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, பாதுகாத்திருக்கிறது சபரி பசுமை அறக்கட்டளை. கீழ்க்கட்டளை ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அரசே அமைக்க முயன்றபோது அதை சட்டத்தின் மூலமாக தடுத்தது இந்த அமைப்பு. இதேபோல் மடிப்பாக்கம் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்பையும் நீதிமன்ற உத்தரவுடன் அப்புறப்படுத்த வைத்திருக்கிறது சபரி பசுமை அறக்கட்டளை. அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் நீர்வழிச் சாலை அமைக்க வலியுறுத்தி விரைவில் கையெழுத்து இயக்கம் தொடங்க இருக்கிறது. அதன் அவசியத்தை நமக்கு விளக்கினார் அறக்கட்டளையின் நிறுவனர் செயலாளர் சுப்பிரமணி.
’’நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை அரசிடமோ, பொதுமக்களிடமோ, வெளிநாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் நிதிபெறும் என்.ஜி.ஓ-க்களிடமோ அறவே இல்லை. அதனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நீர்நிலைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஏரிகளில் வீடு கட்டினால் மின் இணைப்பு கொடுக்கக்கூடாது என சட்டம் போட்டுவிட்டு தாராளமாய் மின் இணைப்பு கொடுத்து அரசே நீர்நிலைகளை அழிக்க துணை போகிறது.
நீர்நிலைகள் அனைத்தும் பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. அவற்றை பாதுகாக்க தவறிவிட்டு மழை நீரை சேகரிக்கச் சொல்கிறார்கள். சிறிதும் பெரிதுமாய் சென்னைக்குள் மட்டுமே 3000 நீர்நிலைகள் இருக்கின்றன. இவை எதையுமே பொதுப் பணித்துறை கண்டுகொள்வதில்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக கடந்த ஆண்டில் மட்டும் 9,000 கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு தந்திருக்கிறது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டோம்.
கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 55 டி.எம்.சி. தண்ணீரும், இந்த மார்ச்சில் தாமிரபரணியிலிருந்து 5 டி.எம்.சி. தண்ணீரும் சரியான திட்டமிடல் இல்லாமல் வீணாக கடலில் கலந்திருக்கிறது. தாமிரபரணி தமிழகத்தில் உற்பத்தியாகும் ஜீவநதி. இதன் குறுக்கே அணை கட்டுவதற்கு நாம் யாரையும் கேட்க வேண்டியதில்லை. ஆனாலும் அணை கட்ட முயற்சிக்கப்படவில்லை.
சென்னையைச் சுற்றியே நீர்நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்து செயல்பட்டு வந்த நாங்கள், முதல்முறையாக தாமிரபரணி மீது பார்வையை திருப்பி இருக்கிறோம். இதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறோம் இந்தக் குழுவானது மாதத்தில் ஒரு நாள் தாமிரபரணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும். இதற்கான பணிகளை கடல் தினத்தன்று தொடங்குகிறோம். அடுத்த கட்டமாக இந்தியா முழுக்க நீர்வழி சாலையை உருவாக்கக் கோடி கையெழுத்து இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.
மும்பை, கொல்கத்தா, கேரளா இங்கெல்லாம் நீர்வழிச் சாலைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஆறுகளில் உபரியாக உள்ள நீரைக் கொண்டு நீர்வழிச் சாலைகளை அமைத்து தண்ணீரின் போக்கிலேயே சரக்குப் போக்குவரத்தை நடத்தலாம். இதன்மூலம் எரிபொருள் தேவை பத்தில் ஒரு பங்காக குறையும் என்பதால் டன்னுக்கு 300 ரூபாய் மிச்சமாகும். எரிபொருள் சேமிக்கப்படுவதால் அந்நியச் செலாவணி இருப்பும் அதிகரிக்கும். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதால் விபத்துகளும் பெருமளவில் குறையும். நீர்வழிச் சாலையால் நிலத்தடி நீரும் உயரும்.
நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு மாற்றாக இந்தத் திட்டத்தை துறை வல்லுநர்கள் மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறார்கள். தாமதிக்காமல் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக நாங்கள் உந்துதல் கொடுப்போம். மத்திய அரசு மனது வைத்தால் இன்னும் 8 ஆண்டுகளுக்குள் நீர்வழிச் சாலைகள் அமைவதை யாராலும் தடுக்க முடியாது’’ திடமாகச் சொன்னார் சுப்பிரமணி.