Published : 29 May 2014 10:00 AM
Last Updated : 29 May 2014 10:00 AM

தொண்ணூறு வயதிலும் தொடரும் தொய்வில்லா போராட்டம்- விவசாயிகளின் தோழர் நயினார் குலசேகரன்

சொந்தமாய் காணி நிலம் கிடையாது. ஆனால், எழுபது வருடங்களாக விவசாயிகளுக்காக போராடிக் கொண் டிருக்கிறார் நயினார் குலசேகரன்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகிலுள்ள நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நயினார் குலசேகரன். கல்லூரியில் படிக்கும் போதே, உழைக்கும் ஏழைகளின் உரிமைகளுக்காக கொடி தூக்கினார். 90 வயதைக் கடந்தும் அந்தப் போராட் டம் நிற்கவில்லை. இப்போதும் இரவு 12 மணி வரை மக்கள் பிரச்சினைகளுக்காக மனு எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘சின்னப் பெரியார்’

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த நயினார் குலசேகரன், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோதே விவசாயி களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி சிறை சென்றவர். இதுவரை பத்து முறைக்கு மேல், மக்கள் பிரச்சினைகளுக்காக சிறை சென்ற இவரை, ‘சின்னப் பெரியார்’ என்று வைகுண்டம் மக்கள் செல்லமாக அழைக்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவைத் தலைவராக இருக்கும் நயினார் குலசேகரனின் போராட்டக் களமும் தாமிரபரணியை மையப் படுத்தியே நகர்கிறது.

அரசு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தாமிர பரணிக்கரை மக்கள் ஓடி வருவது நயினார் வீட்டுக்குத்தான். அவரும் உடனே ஒரு மனுவை எழுதி எடுத்துக் கொண்டு அதிகாரிகளைப் பார்க்க கிளம்பி விடுவார். முதலில் கோரிக்கை மனு அளிப்பார்.

முப்பது நாட்களுக்குள் உரிய பரிகாரம் சொல்லாவிட்டால் போராட்டம். அதற்கும் நியாயம் கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக வழக்கு. இதுதான் இவரின் போராட்ட உத்தி. தாமிர பரணியில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை வாங்கித் தந்ததின் பின்னணி யில் இருந்தவர் நயினார் குலசேகரன். இந்தப் போராட்ட குணம் எப்படி வந்தது?

1950-க்கு முன்பு நிலச்சுவான்தார் கள், விவசாயிகளை கொத்தடிமைத் தொழிலாளர்களாக வைத்திருந்தனர். பொழுதெல்லாம் மாடாய் உழைத்தபின் கொடுக்கிற கூலியை வாங்கிச் சென்றார்கள் விவசாயிகள். இதை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகுதான் 1950-ல், விவசாய வருமானத்தில் நில உரிமையாளருக்கு 40 சதவீதம், விவசாயிக்கு 60 சதவீதம் என குத்தகை பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது அரசு.

அதுவும் போதாது, 20 ஆண்டுக ளுக்கு மேல் நிலத்தை உழுது பணிசெய்யும் விவசாயிகளுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என போராடி னேன். போராடியதோடு மட்டுமில்லா மல், வழக்குப் போட்டு 300 விவசாயி களுக்கு நிலத்தையும் வாங்கிக் கொடுத்தேன்.

இதனால் எல்லாம் ஆத்திர மடைந்த நிலச்சுவான்தார்கள், என்னை ஆள் வைத்து அடித்து குளத்துக்குள் வீசினார்கள். அப்படியும் நான் ஓயவில்லை. 1977-ல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டேன். விவசாயிகளும் பொதுமக்களும் என் பக்கம் நின்றார்கள்.

ஆனால், நிலச்சுவான்தார்களின் சதியால் 2,800 ஓட்டில் தோற்றேன். அதன்பிறகு எனக்கு அரசியல் பிடிக்கவில்லை. எந்தக் கட்சியிலும் நீதிக்கும் நேர்மைக்கும் இடமில்லை. அதனால், இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனால், நினைத்த மாத்திரத்தில் என்னால் 500 பேரைத் திரட்ட முடியும்.

அரசியல்வாதிகளின் ஆசியுடன் ஆற்று மணலும் தண்ணீரும் அநியாயமாய் கொள்ளை போகிறது. விவசாயத்துக்கு பயன்பட வேண்டிய தாமிரபரணி தண்ணீரில் தினமும் 9.70 கோடி லிட்டரை இங்குள்ள தனியார் ஆலைகள் உறிஞ்சி எடுக்கின்றன. போதாததற்கு துக்கு தூத்துக்குடி மாநகராட்சியும் தாமிரபரணியில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீரை எடுக்கும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.

46 ஆயிரம் ஏக்கர்

இதனால், தாமிரபரணியை நம்பி இருக்கும் 46 ஆயிரம் ஏக்கர் நஞ்சையில் இருபோக விவசாயம் பாதிக்கப்படும். அதனால், இந்தத் திட்டத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்குப் போட்டிருக்கிறேன்..தள்ளாத வயதிலும் தடுமாறாமல் பேசுகிறார் நயினார் குலசேகரன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணி மனைகள் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப்பெற்ற நயினார் குலசேகரன், அதிமுக, திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பணி செய்யாமல் ஓ.டி-யில் இருப்பதால் ஒரு பணிமனையில் ஒன்பது லட்சம் நஷ்டமாகிறது. இவர்களை எல்லாம் வேலைக்கு அனுப்பி நஷ்டத்தைக் குறைக்க வேண்டும் என அண்மையில் கலெக்டரிடம் மனு கொடுத்து கெடு வைத்திருக்கிறார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x