

கிராமப்புற மாணவர்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக மதுரை மாவட்ட தைக்வாண்டோ சங்கச் செயலாளர் இலவசப் பயிற்சியை அளித்து வருகிறார். மதுரையை அடுத்த திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் கே.நாகராஜ். இளநிலை அறிவியலில் இயற்பியல் படிப்பு முடித்துள்ள இவர், கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தைக்வாண்டோ குறித்து இலவசப் பயிற்சி அளித்து வருகிறார்.
மதுரை சிந்தாமணியை அடுத்த பனையூர் கிராமத்தில் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளின் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இதில், கிராம மக்களுக்கு கல்வி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.
இந்த பயிற்சி முகாமின்போது கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தைக்வாண்டோ தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை கல்லூரித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனலட்சுமி, கவிதா ஆகியோர் செய்திருந்தனர். இதில், கல்லூரித் தலைவர் மாரீஸ்குமார் கலந்து கொண்டார். இது பற்றி தைக்வாண்டோ பயிற்சியாளர் கே.நாகராஜ் (49) கூறியதாவது:
நான் தைக்வாண்டோ சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தைக்வாண்டோ பயிற்சியாளராக இருந்து வருகிறேன். இதன்படி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பயிற்சியை அளித்து வருகிறேன். இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும்.
இந்தப் பயிற்சியை கற்றுக்கொள்வதற்கு நகர்ப்புற மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, கிராமப்புற மக்களுக்கும் தைக்வாண்டோ பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கிராமப்புறங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் செல்வேன். அங்குள்ள பள்ளிகளில் 4-வது முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் கிராமப்புற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இலவசமாக தைக்வாண்டோ பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை மதுரை மாவட்டத்தில் உள்ள 30 கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். இந்த பயிற்சி மூலம் இதுவரை 300 பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும், கிராமங்களில் பயிற்சி பெற விரும்புபவர்கள் 97519 61591 என்ற எண்ணில் தன்னை தொடர்பு கொண்டால் பயிற்சியை கற்றுத்தருவதாக அவர் தெரிவித்தார்.