திருப்பூர்: புத்தாண்டை போராட்ட ஆண்டாக மாற்றிய காங்கயம் மக்கள்

திருப்பூர்: புத்தாண்டை போராட்ட ஆண்டாக மாற்றிய காங்கயம் மக்கள்
Updated on
1 min read

இந்த ஆண்டின் முதல் நாளை, அதாவது புத்தாண்டை கருப்பு தினமாக அனுசரித்தனர் காங்கயம் பகுதியில் உள்ள எண்ணிலடங்கா கிராமங்கள். காரணம், அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் தொட்டிக்கரி ஆலைகள்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் நூற்றுக்கணக்கில் தேங்காய் எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் தேங்காய் தொட்டிகள் (சிரட்டை) கழிவுப் பொருளாகும். இங்கு சேகரமாகும், டன் கணக்கில் தேங்காய் தொட்டிகளை இங்குள்ள கிராமப் பகுதிகளில் இயங்கும் கரி சுடும் ஆலைகளில் வாங்கி சென்று, தேங்காய் தொட்டிகளை எரித்து கரி உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, தோல் நோய்கள் பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கெட்டுப்போன சூழல்

காங்கயம் வட்டம் பொத்தியபாளையம் மற்றும் வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 35 கிராமங்களில் பெண்கள் குழந்தைகள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் தொட்டிகளை குழியிலிட்டு எரித்து கரி எடுக்கும் ஒரு ஆலை துவங்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொன்றாக ஆலைகள் உருவெடுத்துள்ளன.

அப்பகுதி பொதுமக்கள் சிலரிடம் பேசியபோது, வீரணம் பாளையம் பகுதியில் இயங்கி வரும் தேங்காய் தொட்டிக்கரி நச்சு தொழிற்சாலைகளால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பது போன்ற தொழில்கள் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளது. உலகத்திலேயே நீர்மட்டத்திற்கு கீழே கிணறு தோண்டி, தேங்காய் தொட்டிக்கரி சுடும் முறை தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. ஆலைகளிலிருந்து வெளியேறும் புகை, கரித்தூள் மற்றும் தண்ணீர் கழிவுகளால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் பகுதியில் உள்ள ஆலைகளை அகற்றவேண்டும் என்கின்றனர்.

வாரியம் அலட்சியம்

இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறார் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.கார்த்திகேயன். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்குமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in