Published : 20 Sep 2013 01:29 PM
Last Updated : 20 Sep 2013 01:29 PM

செபி-க்கு சர்வதேச பங்குச் சந்தை கூட்டமைப்பு பாராட்டு

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் கூட்டமைப்பான இயோஸ்கோ, இந்திய பங்குச் சந்தையில் எல்லை தாண்டி வரும் தவறான முதலீடுகளைத் தடுக்க செபி எடுத்துள்ள கட்டுப்பாடுகளை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

இயோஸ்கோ கூட்டமைப்பில் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் குழுவில் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டின் பங்குச் சந்தையிலும் வெளிநாட்டிலிருந்து வரும் முறைகேடான முதலீடுகளைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன.

வெளிநாடுகளிலிருந்து வரும் முறைகேடான பங்குச் சந்தை முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் எடுத்துள்ளதாக அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடு களிலிருந்து வரும் முறைகேடான நிதியை அனுமதித்தால் அது சர்வதேச அளவில் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும். அத்துடன் உள்நாட்டில் முதலீட்டாளர்களிடமிருந்தான நம்பகத்தன்மை முற்றிலும் போய்விடும் என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வரும் தனிநபர் மற்றும் நிறுவன முதலீடுகள் விஷயத்தில் பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்புகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே சிறந்த ஒத்துழைப்பு இருந்தால் முறைகேடான முதலீடுகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் சில நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இத்தகைய ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு தொடர்பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 2005-ம் ஆண்டில் மொத்தம் 520 முதலீடு தொடர்பான கேள்விகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டு அதற்குரிய பதில்கள் பெறப்பட்டன. 2010-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,624 ஆக உயர்ந்தது.

இந்த ஒப்பந்தத்தில் 97 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பில் மொத்தம் 125 நாடுகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x