

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்கள், துறைமுகங்களில் இருந்து மூட்டைக்கு இரண்டு கிலோ வரை குறைத்து அனுப்பப்படுவதாக புகார் கிளம்பி இருக்கிறது.
விவசாயத்துக்குத் தேவையான யூரியா உரம் இந்தியாவில் போதிய அளவு உற்பத்தி இல்லை. பொட்டாஷ் உரம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. பொட்டாஷ் உரத்தையும் கூடுதலாக தேவைப்படும் யூரியாவையும் ஓமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. கப்பல்கள் மூலம் துறைமுகங்களுக்கு வந்து சேரும் இந்த உரங்கள், இந்தியன் பொட்டாஷ் லிமிடெட், ‘கிரிப்கோ’ (KRIPHCO) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தமிழகத்தின் தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் காரைக்கால் துறைமுகம் வழியாக உரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இப்படி இறக்குமதி செய்யப்படும் உரத்தில் 30 சதவீதம் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் 70 சதவீதம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்ப ப்படுகின்றன. துறைமுகத்துக்கு டன் கணக்கில் மொத்தமாக வந்திறங்கும் உரங்கள் ஐம்பது கிலோ எடை கொண்ட மூட்டைகளாக பேக் செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பேக்கிங் செய்யும் டெண்டரை தனியார் ஏஜென்சிகள் எடுத்து செய்துவருகின்றன.
கடந்த சில மாதங்களாக, விற்பனைக்கு அனுப்பப்படும் உர மூட்டைகளில் 2 கிலோ வரை எடை குறைவதாக உர விற்பனையாளர்கள், விவசாயிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து கொங்கு மண்டல உர விற்பனையாளர்கள், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஒரு தவணைக்கு சுமார் 20 ஆயிரம் டன் உரம் கப்பல் மூலம் இறக்குமதியாகிறது. உதாரணத்துக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தினமும் சுமார் 150 லோடு உரங்கள் 50 கிலோ மூட்டைகளாக பேக் செய்யப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு லோடுக்கு 300 மூட்டைகள். ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ குறைந்தால் 150 லோடுக்கு 45 ஆயிரம் கிலோ உரம் குறையும்.
ஒரு கிலோ யூரியா விலை ரூ.5.40. இதன்படி பார்த்தால் எடை குறையும் யூரியாவின் மதிப்பு மட்டும் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் ஆகிறது. ஒரு கிலோ பொட்டாஷ் ரூ.15.60. மொத்தம் 150 லோடுக்கு கணக்கிட்டால், காணாமல் போகும் பொட்டாஷ் உரத்தின் மதிப்பு ரூ.7 லட்சத்து 2 ஆயிரம். இதன்மூலம், தினமும் பல லட்சங்கள் சுருட்டப்படுகின்றன. இதனால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுகின்றனர். இந்த மோசடியைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உர விற்பனை யாளர்கள் கூறுகின்றனர்.