

‘ஐந்து லட்சம் மாணவர்களை சந்திக்க வேண்டும்; ஐயாயிரம் மரக் கன்றுகளை நட்டு மரமாக்க வேண்டும். இவை இரண்டுதான் எனது வாழ்நாள் லட்சியம்’’ என்கிறார் பேராசிரியர் கேப்டன் ஆபிதீன். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாஹிர் உசேன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியரான இவர், 13 ஆண்டுகள் என்.சி.சி. ஆபீஸராக இருந்ததால் பெயருடன் கேப்டன் பட்டம் சேர்ந்துகொண்டது. விடுமுறை நாட்களில் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் கிராமப் புற மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் ஆபிதீன்.
“மாணவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமலேயே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்களுக்காக, ‘என்ன, எங்கே, எப்படிப் படிக்கலாம்?’ என்ற தலைப்பில் 140 படிப்புகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து 2004-ல் ஒரு புத்தகம் எழுதி 500 மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தேன்.
அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கே நேரில் சென்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘என்ன படிக்கலாம்.. என்ன படித்தால் எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது, என்று தமிழகம் முழுவதும் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் செல்லும்போது மரக்கன்றுகளையும் எடுத்துச் சென்று நடச் செய்வேன். கடந்த 10 வருடங்களில் சுமார் 200 வகுப்புகளை நடத்தி 1.30 லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறேன். எனது சர்வீஸ் முடிவதற்குள் 5 லட்சம் மாணவர் களை சந்தித்துவிட வேண்டும். 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவிட வேண்டும். இதுதான் எனது லட்சியம் என்கிறார் ஆபிதீன். (தொடர்புக்கு.. 9965892706)
வாகனங்களை மறிக்கும் ஆசிரியர் மாதேஷ்
தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாயில் முன்பு தருமபுரி நகரின் பிரதான 4 சாலைகள் சந்திக்கின்றன. ‘பீக் ஹவர்’ நேரங்களில் இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து ஆசிரியர் ஒருவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார். அவர், அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளியின் பொது இயந்திரவியல் ஆசிரியர் மாதேஷ்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்து வருகிறார். வார நாட்களில் காலை 8.30 முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 முதல் 5.30 மணி வரையும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடுகிறார். காவல்துறையும், பள்ளி நிர்வாகமும் அவருக்கு அதற்கென சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதுபற்றி மாதேஷ் கூறும்போது, ‘‘நானும் இதே பள்ளியில்தான் படித்தேன். அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் அடிக்கடி பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்குவதை பார்த்து வேதனைப்படுவேன். அரசு ஆசிரியராக மாறிய பிறகு இந்தப் பணியை தொடர்ந்து வருகிறேன். என் செயலை சிலர் கிண்டலும், ஏளனமும் செய்வ துண்டு. ஆனாலும் உடம்பில் தெம்பிருக்கும் வரை எனது இந்தப் பணி தொடரும்’’ என்றார்.