Published : 29 Jan 2019 01:20 PM
Last Updated : 29 Jan 2019 01:20 PM

அழிவின் பிடியில் அதிசயப் பறவை! - பாதுகாக்கப்படுமா பாறு கழுகுகள்?

சுற்றுச்சூழல், சுகாதாரத்தை காக்க பல்லாயிரம் கோடி செலவிடும் நிலையில், இறந்த விலங்குகளை உண்டு, வனத்துக்கும், சுற்றியுள்ள பகுதிக்கும் சூழல் பாதுகாப்பு வழங்கும்  பாறு கழுகு எனப்படும் ‘பிணம் தின்னிக் கழுகு’ வகையைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

கிராமப் பகுதிகளில் இறந்து கிடக்கும் விலங்குகளை, கூட்டமாக பாய்ந்து வரும் பாறு கழுகுகள், சில மணி நேரத்துக்குள் எலும்பைத் தவிர, மற்றெல்லாவற்றையும் தின்று,  தூய்மைப் படுத்திவிட்டுச் சென்றுவிடும். காட்டில் நீர்நிலைகளுக்கருகில் விலங்குகள் இறக்க நேர்ந்தால், அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலந்து, தாகம் தணிக்க வரும் இதர விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

இதிலிருந்து விலங்குகளைக் காக்கும் பெரும்பங்கு பாறு கழுகுகளைச் சேரும். ஆனால், தற்போது பாறு கழுகுகள் இல்லாததால்,  நாய்களும், எலிகளும் இந்தப் பணியை மேற்கொள்கின்றன. வெறி நாய்களால் இந்தியாவில் ஆண்டுக்கு 30,000 பேர் இறக்க நேரிடுகின்றது.

paaru-2jpg

பாறு கழுகுகள் கோமாரி நோய் தாக்கி இறந்த விலங்கை உண்டாலும், நாள்பட்ட அழுகிய இறைச்சியை உண்டாலும், தொற்று நோய்வாய்ப்பட்டு இறந்த கால்நடைகளை உண்டாலும், அவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

குறிப்பாக, அடைப்பான், கழிச்சல், காணை நோய் , வெறிநோய், கோமாரி நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும், பாறு கழுகுகளின் வயிற்றில் சுரக்கும் அமிலம் செயலிழக்கச் செய்து விடுகிறது. இதனால் கொள்ளை நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. அதேபோல,  இவற்றிடமிருந்து எந்த நோயும், பிற உயிரினங்களுக்குப் பரவுவதில்லை. எனினும், பொதுவாக இவை இழிவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.

`உயிரினங்களின் தோற்றம்`  நூலை எழுதிய சார்லஸ் டார்வின் ‘அழுகிய பிணங்களில் களியாட்டம் போடும் வெறுக்கத்தக்க பறவை’ என்கிறார். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலிகூட, “இவை பார்ப்பதற்கு வெறுப்பூட்டும் தோற்றமுடையவை” என்றே குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்தில் இந்தப் பறவையினத்துக்கு ‘வல்சர்’ என்று பெயர். இதற்கு கொள்ளைக்காரன், சூறையாடுபவன் என்று ஆங்கில அகராதி விளக்கம் சொல்கிறது. ஊழல்வாதிகள், நேர்மையற்றவர்களை குறிக்கும் ‘வல்சர்’ என்ற வார்த்தை, இயற்கைச் சூழலைக் காக்கும் பாறு கழுகுகளையும் குறிப்பிடுவது விநோதம்.

அரிய உயிரினமான பாறு கழுகுகளைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது ‘அருளகம்’ அமைப்பு. 2002-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பாறு கழுகினத்தைக் காக்க கடந்த 6 ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறது.

முதல்கட்டமாக மாயாறு பகுதியில் இருக்கும் 160 வெண்முதுகு பாறுகளை 320-ஆக உயர்த்தவும்,  20 கருங்கழுத்து பாறுகளை 40-ஆக உயர்த்தவும், 12 செம்முகப் பாறுவை 24-ஆக உயர்த்தவும், அருளகம் அமைப்பு வனத் துறை வழிகாட்டுதலுடன் முயற்சித்து வருகிறது.

paaru-3jpgright

அருளகம் அமைப்பின் செயலர் சு.பாரதிதாசனி டம் பேசினோம். “40 ஆண்டுகளுக்கு முன் இவற்றை சாதாரணமாக பார்க்கலாம். ஆனால், தற்போது இது அரிதாகிவிட்டது. தமிழகம் முழுவதும் இருந்த இவை, தற்போது சத்தியமங்கலம், நீலகிரி வனப் பகுதிகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. நான்கு வகை பாறு கழுகினங்களையும் சேர்த்து சுமார் 250 வரை மட்டுமே இருக்கலாம்.

கருங்கழுத்துப் பாறு கழுகு, செம்முகப் பாறு கழுகு, மஞ்சள் முகப் பாறு கழுகு ஆகியவை ஒற்றை எண்ணிக்கையில்தான் உள்ளன. நாங்கள் நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங் களில் திருவிழா நடைபெறும் இடங்களுக்கு சென்று, பாறு கழுகுகள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தினோம். மேலும், பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டோம்.

1950-களில் சென்னையில் காகத்தின் எண்ணிக்கையைவிட இவை அதிகமாக இருந்துள்ளன. திருக்கழுக்குன்றத்தில்  உள்ள கோயிலுக்கு மஞ்சள்முகக் கழுகு  30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையாக வந்து,  படையலைத் தின்று செல்லும். தற்போது அவை  வருவதில்லை.

கால்நடைகளின் வலிநீக்கியாகப் பயன்படுத்தப்பட்ட `டைக்குளோபினாக்` மருந்து இப்பறவைகளின் அழிவுக்கு  முதன்மைக் காரணம் என்ற தகவலை, ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களிடம் விளக்கி, அந்த மருந்துக்கு தடை விதிக்குமாறு கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டோம். இதையடுத்து, கிராம சபைகளில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

டைக்குளோபினாக் மருந்துக்குப் பதிலாக, கீட்டோபுரோபன் மருந்து,  அரசு கால்நடை மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மருந்தும் பாறு கழுகுகளை அழிக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு எதிராக முறையீடுகளை தொடர்ந்தோம்.

இதன் பலனாக, கிட்டோபுரோபன் மருந்தை அரசு கால்நடை மருந்தகங்களில் திரும்பப் பெற்று 2015-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தியாவில் முதன்முறையாக இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததன்மூலம், உலக அளவில் பறவை ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது” என்றார்.

பாறு கழுகுகள் பலவிதம்

உருவில் மிகப் பெரிய பறவைகளுள் ஒன்றான இவ்வினத்தில், உலகில் 23 வகைகள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் இவை காணப்படுகின்றன.  இந்தியாவில் 9 வகைகளும், தமிழகத்தில்  நான்கு வகை கழுகுகளும் உள்ளன.

paaru-4jpgசு.பாரதிதாசன்

விருதுகள்

அருளகம் அமைப்பு பாரதிதாசனுக்கு, `பல்லுயிர் காவலர்’ விருதை புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளையும், அமெரிக்காவில் உள்ள கிரிட்டிக்கல் எக்கோசிஸ்டம் பார்ட்னர்ஷிப் ஃபண்டு அமைப்பு `பல்லுயிர் செழிப்பிட நாயகன்’ விருதையும் வழங்கியுள்ளது. இவரது திட்டத்தை, இங்கிலாந்து ஓரியன்டல் பேர்டு கிளப் அமைப்பு சிறப்பித்துள்ளது. பாறு கழுகுபாதுகாப்பு தொடர்பான பணிகளை ஒழுங்கு படுத்தும் தென்னிந்திய அளவிலான  ஒருங்கிணைப் பாளராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாம் என்ன செய்ய வேண்டும்...

பாறு கழுகுகளுக்கு கேடுபயக்கும் டைக்ளோபினாக், கீட்டோபுரோபேன், அசிக்குளோபினாக், புளூநிக்சின், நிமுசிலாய்ட்ஸ் உள்ளிட்ட மருந்துகளை புறந்தள்ள வேண்டுகோள் விடுக்க வேண்டும். இயற்கையாக இறந்த கால்நடைகளை ஊருக்கு  ஒதுக்குப்புறமாய், பாறு கழுகுகளுக்கு இரையாகப்  போட்டு விடலாம். ஊருக்கு அருகே வன விலங்குகள் இறந்தால், அவற்றைப்  புதைப்பதை கைவிட்டு, அதை எடுத்துச் சென்று காட்டுக்குள் போட வேண்டும். இதனால், பாறு கழுகுகள் மட்டுமின்றி, கழுதைப் புலிகள், மைனாக்கள், காட்டுப் பன்றிகள், ஈக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் பயன்பெறும்.

பாறு கழுகுகள் அடிபட்டுக் கிடந்தாலோ, இறந்து கிடந்தாலோ,  வனத் துறையினருக்குத் தெரியப்படுத்தலாம். பாறு கழுகின  இளம் பறவைகளைப் பார்த்தால், இறைச்சியை சிறு சிறு துண்டுகளாக்கி வழங்குவதுடன், வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x