Published : 23 Jan 2019 01:36 PM
Last Updated : 23 Jan 2019 01:36 PM

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஆப்பிரிக்கா மகோகனி! - நம்பிக்கையூட்டுகிறார் ஈரோடு விவசாயி

"உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது" என்பார்கள். தற்போதைய சூழலில் இந்தப் பழமொழி தமிழக விவசாயிகளுக்கு சாலப் பொருந்துகிறது. வறட்சி, வெள்ளம், இடுபொருள் விலையேற்றம், கூலி ஆட்கள் கிடைக்காதது, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, நோய், பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவற்றையெல்லாம் தாண்டி விளைச்சல் கிடைத்தால், அதற்குரிய விலை கிடைப்பதில்லை.

பல இடங்களில் விளை பொருளை அறுவடை செய்யாமல் விடுவதும், சாலையில் கொட்டிப் போராடுவதும் தொடர்கிறது. இதனால் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை மேற்கொள்வதில் பெரும் தயக்கம் காட்டுகின்றனர்.இந்தப் பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண, `ஆப்பிரிக்கா மகோகனி` உதவும் என்கிறார்,  வனத் துறையின் கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் (பணி நிறைவு) கு.குமாரவேலு.

திமுக ஆட்சியின்போது முழு நேர திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ள இவர், சவுக்கு மரம் வளர்ப்பு தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 17 ஏக்கரில் பண்ணை வைத்துள்ள விவசாயி குமாரவேலு, பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று மரங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர். வறட்சியில் செழித்து வளரும் மரங்கள் குறித்து விவசாயிகளிடையே  விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

"ஆப்பிரிக்கா மகோகனி என்ற பெயரே கேள்விப்படாததாக இருக்கிறதே? இந்த மரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? தமிழக விவசாயிகளுக்கு இது பயனளிக்குமா?" என்ற சரமாரியான கேள்விகளுடன் அவரை அணுகினோம்.

"புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு 1982-ல் சென்றபோது, முதன்முதலில் ஆப்பிரிக்கா மகோகனி (Khaya senegalensis) மரத்தைப் பார்த்தேன். பிரம்மாண்டமாய் வளர்ந்திருந்த இந்த மரம், தமிழக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாய் அமையும் எனக் கருதினேன். பின்னர், 1999-ல் வட ஆஸ்திரேலியாவின் டார்வினுக்குச் சென்றபோது, அங்கு மகோகனி மரத்தை அதிக அளவில் பயிரிட்டிருந்தனர். மகோகனி மரத்தை வளர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக  அறிந்துகொள்ள முடிந்தது.

இதையடுத்து, ஆப்பிரிக்காவில் இருந்து மகோகனி மரத்தின் விதைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் விதைகளைத் தர மறுத்த ஆப்பிரிக்க அரசுக்கு, எனது ஆய்வுகள் குறித்த தகவல்களை தெரிவித்தேன். மேலும், `வியாபார நோக்கில் இந்த விதைகளை நான் வாங்கவில்லை; விவசாயிகளுக்கு வழங்கவே வாங்குகிறேன்` என்றும் தெரிவித்தேன். முடிவில் 20 கிலோ அளவுக்கு மகோகனி விதைகளை அவர்கள் வழங்கினர். சுங்கவரி விதிப்புடன் இந்த விதைகளுக்கு ரூ.2 லட்சம் செலவானது.

இந்த விதைகளை, ஈரோடு மாவட்டம் பெருந்தலையூரில் நர்சரி வைத்துள்ள, நண்பர் கருணாநிதியிடம் கொடுத்து வளர்க்கச் செய்தேன். 20 கிலோ விதைகளில் எட்டாயிரம் நாற்றுகள் கிடைத்தன" என்றார்.

தமிழக வனத் துறை தலைவராக (ஆராய்ச்சிப் பிரிவு) குமாரவேலு பணியாற்றியபோது, ஆப்பிரிக்கா மகோகனி விதைகளை 2004-ல் தமிழகம் கொண்டுவந்துள்ளார். அவற்றை, பவானிசாகர், அந்தியூர் வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வன ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குழந்தைசாமி என்ற விவசாயிக்கும் கொடுத்துள்ளார். அந்தியூரில் உள்ள தனது தோட்டத்திலும் மகோகனி விதையைப் பயிரிட்டுள்ளார். அந்த மரங்கள் தற்போது பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கின்றன.

"வறட்சிக்கு தென்னை மரம் தாங்காது. ஆனால், மகோகனி மரங்கள் தாங்கும். நம் உள்நாட்டுத் தேவைக்காக மரங்களை இறக்குமதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம். மகோகனி வளர்ப்பு, நம் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதிக்கும் வழிவகுக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்

இந்த மரத்துக்கு பெரிய அளவில் சந்தை உள்ளது. இந்த மரம் வளர்ப்பதால், புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும்" என்ற குமாரவேல், "நான் செடி வியாபாரம் செய்யவில்லை. நியாயமான, நம்பகமான  நபர்கள் மூலம், விவசாயிகளுக்கு லாபம் தரும் மரக்கன்றுகள் கிடைக்க வழிவகை செய்கிறேன். கிராமப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் விவசாயிகளின் நலனே எனக்கு முக்கியம்" என்றார் உறுதியுடன்.

மருத்துவ குணம் நிறைந்த மகோகனி

"ஆப்பிரிக்கா மகோகனி மரத்தின் பட்டைகளுக்கு மருத்துவக் குணமும் உண்டு. 1890-ல் பிரான்ஸ் நாட்டில்  `அமிபியாஸ்` எனப்படும் வயிற்றுப்போக்கால் பலர் உயிரிழந்த நிலையில்,  மகோகனி மரத்தின் பட்டைகள் மருந்தாகப் பயன்பட்டுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் இந்த மரத்தை நடவு செய்யலாம். காற்றின் வேகத்தை இவை தாங்கி நிற்கும். ஒரு நாற்றின் விலை ரூ.50. 100 நாற்றுகளை நட, இரண்டு அடி குழி தோண்ட ரூ1,000 செலவாகும். இவற்றுக்கு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சாவிட்டாலும் மரம் காய்ந்து போகாது.

எனினும், அதிக தண்ணீர் இருந்தால்,  வளர்ச்சி வேகமாக இருக்கும். வேறெந்த பராமரிப்பும் இல்லாமலே, 10 ஆண்டுகளில் 120 செ.மீ. சுற்றளவு கொண்ட பெரிய மரமாகவும், உயரமாகவும் இது வளரும்.

ஒரு மரத்தின் விலை சராசரியாக ஒரு கன அடிக்கு ரூ.1,000 விலை போகும் என்பதால், பத்து ஆண்டுகளுக்குப் பின் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 130 மரங்கள் நடலாம். மேலும், ஊடுபயிரும் வளர்க்கலாம். வரப்பில் மட்டும் 30 மரங்களை நடவு செய்யலாம்" என்கிறார் குமாரவேலு.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x