தொடரும் பெண் சிசு கருக்கொலை: போராடும் எஸ்.ஐ.ஆர்.டி. அமைப்பு

தொடரும் பெண் சிசு கருக்கொலை: போராடும் எஸ்.ஐ.ஆர்.டி. அமைப்பு
Updated on
2 min read

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடந்த பெண் சிசுக் கொலைகளையும் கருக் கொலைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் ‘ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி சங்கத்திற்கு (எஸ்.ஐ.ஆர்.டி) பெரும் பங்கு உண்டு.

34 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னமும் பெண் சிசுக் கொலைகளையும் கருக்கலைப்புகளையும் தடுக்கும் பணிகளை தொடர்கிறது எஸ்.ஐ.ஆர்.டி.

பெண் சிசுக்கொலைகளை தடுப்பதற்காக 1980-ல் களம் இறங்கிய எஸ்.ஐ.ஆர்.டி., 1986-ல் இந்த அவலத்தை பகிரங்கப்படுத்தியது. அதன் பிறகு அரசு தரப்பு விழித்துக் கொண்டு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், சிசுக் கொலைகள் முற்றிலுமாக நிறுத்தப் படவில்லை. இந்த நிலையில் 1991-ல் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. கூடவே, பெண் சிசுக்களை கொலை செய்தால் அந்தக் குழந்தையின் தாய் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

ஆனாலும் கூட, பெண் சிசுக் கொலை அதிகமாக நடந்த மாவட்டங்களான மதுரை, தேனி, சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னமும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிர்பார்த்த இலக்கில் இல்லை என்கிறார் எஸ்.ஐ.ஆர்.டி-யின் இயக்குநர் ஜீவா.

‘‘இப்போது சிசுக் கொலைகள் குறைந்துவிட்டாலும் கருக் கொலைகள் நிற்கவில்லை. காரணம், ஒரு சில ஸ்கேன் சென்டர்கள். தமிழகம் முழுவதும் சுமார் 4,578 ஸ்கேன் சென்டர்கள் இருக்கின்றன. இவற்றில் 550 சென்டர்களை கண்காணித்து அந்த மையங்கள் எல்லாம் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருப்பதாக புகார் கொடுத்தோம். பெண் கருக்கொலை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடுத்திருக்கிறோம்.

ஆண் - பெண் பிறப்பு விகிதம் 1000 - 952 என்ற நிலையில் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால் 2011-ல் தமிழகத்தில் 2 லட்சம் பெண் குழந்தைகள் பிறக்கவே இல்லை என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. இந்தக் குழந்தைகள் எல்லாம் கருவிலேயே சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் கருக்கொலை, சிசுக் கொலைகள் அதிகமாக இருந்த மதுரை, தேனி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக குறைந்திருக்கிறது. இங்கெல்லாம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 892 பெண் குழந்தைகள் தான் பிறப்பதாக தகவல் இருக்கிறது.

பெண்ணுக்கு அதிக கட்டுப்பாடு

கருக்கொலை என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயம். இதில் பெண்களை மட்டுமே குற்றம் சாட்டுவதில் அர்த்த மில்லை. பெண்ணை இந்த சமுதாயம் எப்போதுமே இரண்டாம் தர குடிமகளாகத்தான் பார்க்கிறது. அரசியல், சமூகம், ஏன்.. திருமணத்தில் கூட பெண் ஆணை விட குள்ளமாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் போடும் இந்த சமுதாயம், ஆணுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. இயற்கைக்கும் பெண்ணுக்கும் மறு உற்பத்தி இருக்கிறது. ஆனால், இரண்டையுமே ஆண் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். இந்த நிலைமை மாறாதவரை பெண் சிசு, கருக்கொலைகளை முற்றிலுமாக தடுத்துவிட முடியாது’’ என்று உறுதிபடச் சொல்கிறார் ஜீவா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in