உறவுகளை போற்றும் ‘நிலா விருந்து’: மாதம் ஒரு வீட்டில் கூடி மகிழும் நகரத்தார் குடும்பங்கள்

உறவுகளை போற்றும் ‘நிலா விருந்து’: மாதம் ஒரு வீட்டில் கூடி மகிழும் நகரத்தார் குடும்பங்கள்
Updated on
1 min read

வீட்டுக்குள்ளேயே உறவுகளைத் தேட ஆளில்லாத இந்தக் காலத்தில் சென்னையில் 25 குடும்பங்கள் மாதத்தில் ஒருநாள் நிலா விருந்து கொடுத்து சொந்தங்களை புதுப்பித்து பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றுகின்றன.

விருந்தோம்பலுக்கு பேர் போனது செட்டிநாடு. ஆனால், இப்போது அங்கேயே உறவுகளைச் சொல்லி அழைக்க ஆள் இல்லை. இயந்திரத்தனமான வாழ்க்கை அத்தனை உறவுகளையும் ஆளுக்கொரு திசையில் அள்ளிப் போட்டுவிட்டது. இதனால், வளரும் தலைமுறைக்கு யாரை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது என்றுகூட தெரியவில்லை. அப்படிப்பட்ட செட்டிநாட்டு பகுதியின் நகரத்தார் (செட்டியார்) குடும்பங்கள்தான் இந்த நிலா விருந்தை கொண்டாடுகின்றன.

நிலா விருந்து குழுவுக்கு அடித்தளம் போட்டவர் ‘நகரத்தார் மலர்’ பத்திரிகையின் ஆசிரியர் இளங்கோவன். இவரது முயற் சியில் சென்னையில் உள்ள நகரத்தார் இன சொந்தங்கள் சிலர் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஓரிடத்தில் ஒன்று கூடுவார்கள். மாதம் ஒருவரது வீட்டில் குடும்பங்களுடன் இந்த சந்திப்பு நடக்கும். அந்த மாதத்தில் தாங்கள் புதிதாக கற்றுக்கொண்ட விஷயங்கள், உறவுகளில் நடந்த, நடக்கப் போகிற சுப, துக்க நிகழ்வுகள் அனைத்தையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர்.

இதுகுறித்து நிலா விருந்து குழு அமைப்பாளர் அரசு அழகப்பன் விளக்குகிறார்.. “அனைவருக்குமே பணிச்சுமைகள் அதிகரித்துவிட்டன. இதன்காரணமாக சொந்த பந்தங் களோடு உட்கார்ந்து பேசக்கூட முடியவில்லை. ஒரே ஊரில் இருந்தாலும் ஒருவரையொருவர் சந்திக்க முடியவில்லை. என்னு டைய அப்பத்தாவும் ஆயாவும் எனக்கு நிலா சோறு ஊட்டி கதை சொல்வார்கள். ஒரு கவளம் சோற்றுக்கு ஒரு சேதியை எனக்கு புரியவைப்பார்கள். ஆனால், இன்றைக்கு குழந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எல்லோரும் ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம்.

எனவே, குறைந்தபட்சம் நம் சொந்தங்களுக்குள்ளாவது கூடிப் பேசி உறவுகளை புதுப்பித்துக் கொள்ளலாமே என்பதற்காகத்தான் இந்த ‘நிலா விருந்து’. தொடக்கத்தில் பவுர்ணமி நாளில்தான் இந்த விருந்தை வைத்திருந்தோம். ஆனால், சிலருக்கு அந்த நாளில் வருவது சிரமமாக இருந்ததால் இப்போது, பவுர்ணமிக்கு அடுத்து வரும் விடுமுறை நாளில் நிலா விருந்து வைக்கிறோம். இந்தக் குழுவில் 25 குடும்பங்கள் இருக் கின்றன. மாதம் ஒரு வீட்டில் நிலா விருந்து இருக்கும். ஒரு மாதம் விருந்து முடியும்போதே அடுத்த மாதம் யார் வீட்டில் விருந்து என்பதை சொல்லிவிடுவார்கள்.

இதுவரை 27 நிலா விருந்து நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக் கின்றன. இன்னும் சிலரும் இந்தக் குழுவில் சேர முன்வந்தார்கள். ஆனால், 25 குடும்பங்கள்தான் லிமிட் என்பதால் அவர்களை தனியாக ஒரு குழுவை உருவாக்கச் சொல்லி இருக்கிறோம். மாதத்தில் ஒருநாள் இப்படிக் கூடிக் கலைவதை நாங்கள் மாத்திரமல்ல.. எங்கள் குழந்தைகளும் வீட்டுப் பெரியவர்களும் ரொம்பவே ரசிக்கிறார்கள். அந்தளவுக்கு பல நல்ல அனுபவங்களை இந்த நிலா விருந்து எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்றார் அரசு அழகப்பன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in