

மத்தியச் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளையும் அவர்களது குழந்தைகளையும் நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் மாற்றுத் திறனாளி இளைஞரும் பாளைச் சிறையின் மனநல ஆலோசகருமான ராஜா. இது குறித்து கடந்த 23.06.14 -ம் தேதியிட்ட ‘தி இந்து’வில் கட்டுரை வெளியாகி இருந்தது. இம்மாதம் 22ம் தேதி ராஜாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது. தனது திருமணத்தை ஒட்டி பாளைசிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் திருமண விருந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார் ராஜா.
இந்தத் தகவலை கேள்விப்பட்டு ராஜாவை தொடர்பு கொண்டோம். உற்சாகமாகப் பேசினார்.
“திருச்சியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. என்னை நேசிக்கும் கைதிகள் மத்தியில்தான் எனது திருமணம் நடக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதற்கு சிறை விதிகளில் இடமில்லை. அதனால்தான் சிறைக் கைதிகளுக்கும் வெளியில் இருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் திருமண விருந்து கொடுக்க தீர்மானித்தேன்.
பாளை சிறையில் தற்போது சுமார் 1200 கைதிகள் இருக்கிறார்கள். இதில் ஆயுள்தண்டனை கைதிகள் மட்டுமே சுமார் 600 பேர். இவர்களெல்லாம் நல்ல சாப்பாட்டைப் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. உறவுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், ஜாமீனில் எடுக்க ஆள் இல்லாதவர்கள், ஜாமீன் எடுக்க வழி இல்லாதவர்கள் என பலதரப்பட்ட கைதிகள் அங்கே இருக்கிறார்கள். இவர்கள் சிறையில் தரப்படும் ஒரு கட்டிச் சோற்றைத் தவிர எதையுமே காணாதவர்கள்.
சிறை நிர்வாகம் சிறைக்குள்ளேயே அங்காடி நடத்துகிறது. கைதிகள் தேவைப்பட்டால் இந்த அங்காடியில் காசு கொடுத்து தங்களுக்குத் தேவையானதை வாங்கிச் சாப்பிட முடியும். ஆனால், பெரும் பாலான கைதிகள் சிறையில் பணி செய்து கிடைக்கும் ஊதியத்தை அப்படியே தங்களது குடும்பத்துக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
சிறையில் வாரம் ஒருமுறை சிக்கன் போடுவார்கள். அதைக்கூட சில கைதிகள் தங்களுக்கு பக்கத்தில் உள்ள கைதிகளுக்கு கொடுத்துவிடுவார்கள். கேட்டால், ’சிறைக்கு வெளியே என் குடும்பம், பிள்ளை கள் தெருவில் நிற்கும்போது எனக்கு சிக்கன் ஒரு கேடா?’ என்பார்கள்.
இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் சிறைக்குள் புழுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் எனது திருமணத்துக்கு அழைக்க இருக்கிறேன். ஆனால், அவர்களால் சிறையை விட்டு வெளியில் வர முடியாது. அதனால் திருமண நாளன்று 1200 கைதிகளுக்கும் ஒருவேளை திருமண விருந்து கொடுக்க முடிவு செய்தேன்.
இதுதொடர்பாக சிறை அதிகாரிகளிடம் பேசியபோது, தனிநபர் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு சிறைக் கைதிகளுக்கு உணவு கொடுக்க முடியாது, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட ஆறு பண்டிகைகள் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய விடுமுறை நாட்கள் ஆகியவற்றில் மட்டுமே உணவு கொடுக்க முடியும்” என்று சொல்லி விட்டார்கள்.
அதனால், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பாளை சிறையில் உள்ள அத்தனை கைதிகளுக்கும் திருமண விருந்து கொடுக்கிறேன். பத்து நாளைக்காவது அவங்களால் மறக்க முடியாத அளவுக்கு அந்த விருந்து இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதேசமயம், திருமணத்திற்கு, சிறைக்கு வெளியில் இருக்கும் கைதிகளின் மனைவி, மக்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப் போகிறேன். சில கைதிகளின் உறவினர்கள் தூரத்தில் இருப்பார்கள். திருமணத்துக்கு வந்து போவதே அவர்களுக்கு பெரும் சுமையாக இருந்து விடக்கூடாது என்பதால் நெல்லைக்கு அருகிலுள்ளவர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்கத் தீர்மானித்திருக்கிறேன்.
திருமணத்திற்கு மாத்திரமல்ல.. இனி என் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் பாளை சிறைக் கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முக்கியமான இடமிருக்கும்” என்றார் ராஜா.