

‘இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?' என்ற கட்டுரை மனதை உருக்குவதாக இருந்தது. உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு, அந்த ஆலையை ஆய்வுசெய்து அங்கே காணப்படும் குறைகள் களையப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர் இதுபற்றி இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றிய விளக்கத்தை உடனே வழங்க வேண்டும். காயல்பட்டினம் மக்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் விரைவாக வழக்குத் தொடர வேண்டும்.
சூழல் தொடர்பான மாசு விளைவிக்கும் பல்வேறு திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, மக்களோடு இணைந்து அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழக முதல்வர், இதில் தலையிட்டு காயல்பட்டினம் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கட்டுரையையே ஆதாரமாகக் கொண்டு உயர் நீதிமன்றமே சுயமாக உரிய நடவடிக்கை எடுத்து, இந்தக் கொடூர ஆலையினால் வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
- வ. சுந்தரராஜு, முன்னாள் இந்திய வனப் பணி அலுவலர், திருச்சி.