

படிக்கட்டில் பயணம் செய்ததைத் தட்டிக்கேட்ட மாநகரப் பேருந்து நடத்துநரை, அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் சமூக ஒழுங்கை மதிக்காமல் அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெருகிவருவது கவலைக்குரியது.
அவர்களது ஒழுங்கீனத்தைத் தட்டிக் கேட்பவர்கள் மீது வன்முறை செலுத்தும் போக்கும் அதிகரித்திருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, சென்னை போரூர் சந்திப்பு அருகே மாநகரப் பேருந்து ஒன்றில், போரூர் அரசு ஆண்கள் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவர்கள் இருவர் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.
இதைக் கவனித்த நடத்துநர் பேருந்துக்குள் வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கோபமடைந்த மாணவர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாணவர்களைக் காவல் துறையினர் விசாரித்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.