

அண்மையில் சென்னையைச் சுற்றிலும் ஏடிஎம் திருட்டுச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்திருப்பதும், அவற்றில் ஒன்றில் திருடர்கள் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்றிருப்பதும் அதிர்ச்சி அளிக்கின்றன.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ரகசியக் குறியீட்டு எண்ணைத் தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களது கணக்கிலிருந்து பணத்தை அபகரிப்பது, அவர்கள் பணத்தை எடுத்துச்செல்லும் வழியில் பறிப்பது, ஏடிஎம் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சைபர் குற்றங்கள், இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருடுவது முதலான குற்றச்செயல்கள் புதிதல்ல. எனினும், ஏடிஎம் திருட்டுகள் தொடர்ச்சியாக நிகழ்வது கவலைக்குரியது.
அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்திலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியிலும் கூடப்பாக்கத்திலும் உள்ள ஏடிஎம் மையங்களில் குறுகிய கால இடைவெளியில் திருட்டுகள் நடந்துள்ளன. கண்காணிப்பு கேமராவைச் செயலிழக்க வைப்பது, கேஸ்கட்டர் இயந்திரத்தால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திறப்பது என ஏறக்குறைய ஒரே வகையான உத்திகளே இந்தக் குற்றங்களில் பின்பற்றப்பட்டுள்ளன.