

மயன்மார் நாட்டைச் சேர்ந்த 14 வயது ரோஹிங்கியா சிறுவனை ‘அகதி’ எனச் சொல்லி 19 வயதைத் தாண்டாத நான்கு டெல்லி இளைஞர்கள் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், எல்லையோர நாடுகளில் இருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வருகிறவர்கள் மீது நடைபெறும் இனரீதியான தாக்குதல் தொடர்வதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமான சகோதரத்துவத்தையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மாண்பையும் இதுபோன்ற செயல்கள் கேள்விக்கு உள்ளாக்கிவிடுமோ என்னும் அச்சம் எழுகிறது. திரிபுராவிலிருந்து உயர் கல்வி பயில்வதற்காக டேராடூனில் வசித்த ஆஞ்சல் சக்மா என்கிற இளைஞரையும் அவரது சகோதரரையும் ‘சீனர்கள்’ எனக் கேலியாகப் பேசி, கடந்த டிசம்பர் 9 அன்று சிலர் தாக்கினார்கள்.
இதில் பலத்த காயமடைந்த ஆஞ்சல் சக்மா சிகிச்சை பலனின்றி இறந்தார். மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டக்கில் உள்ள இந்திரா காந்தி தேசியப் பழங்குடியினர் பல்கலைக்கழக விடுதியில், அசாமைச் சேர்ந்த ஹிரோஷ் ஜோதி தாஸ் என்கிற முதுகலை மாணவர் ஐந்து பேரால் கடந்த ஜனவரி 13 அன்று தாக்கப்பட்டார்.