

இந்தியாவிலேயே முதன்முறையாக, பிஹார் தலைநகர் பாட்னாவில் தொடங்கப்பட்டிருக்கும் ‘பாதிக்கப்பட்டோர் உரிமை மையம்’ சாமானிய மக்கள் சட்ட நடவடிக்கைகளை அணுகுவதற்கான புதிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிஹார் மாநிலச் சட்டச் சேவைகள் ஆணைய வளாகத்தில், பாதிக்கப்பட்டோர் உரிமைகள் மையத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடந்த செப்டம்பர் 26 இல் திறந்துவைத்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் நலன்காக்கும் அம்சங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதையும் சட்ட நடைமுறைகளைத் திறன்மிக்கதாக, எளிதானதாக ஆக்குவதையும் உறுதிப்படுத்துகிற வகையில் இது செயல்படுத்தப்படுகிறது.
நாட்டில் ஏறக்குறைய 5.4 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்வு காணப்படும் வழக்குகளைவிடப் புதிய வழக்குகளே அதிக அளவில் பதிவாகின்றன.
இந்தியக் குற்றவியல் நீதித் துறை நடைமுறைகள் பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை முன்னிறுத்தி இயங்கிவந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்தது முதல், அது பற்றிய சாட்சியத்தை நேரடியாக அளிக்கும்வரை அவரது இருப்பிலும் பாதுகாப்பிலும் அக்கறை காட்டுவதும் அவசியம்.